“அவள்”- ஆஹா.. ஓஹோ!- சித்தார்த் பெருமிதம்!

ஒரு படைப்பாளியாக என்றுமே  தன்னை அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான ‘அவள்’படத்தில் தெரிய வருகிறது.திகில் படமான  ‘அவள்’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. கதாநாயகனாக மட்டும் இல்லாமல், இப்பட இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தின் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். இந்திய சினிமாவில் தரமான கதைகளை தேடி கண்டெடுத்து தயாரிக்கும் ‘Viacom18 Motion Pictures’ நிறுவனத்தோடு தன் Etaki Entertainmemt என்ற நிறுவனம் மூலம் இணைந்து இப்படத்தை சித்தார்த் தயாரித்துள்ளார்.
‘விக்ரம் வேதா; போன்ற பல வெற்றி படங்களை ரிலீஸ் செய்து தனக்கென பெரும் பெயரையும் மதிப்பையும்  சம்பாதித்திருக்கும்  ‘Trident Arts’  ரவீந்திரன் அவர்கள் ‘அவள்’ படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளார்.
‘அவள்’ குறித்து சித்தார்த் பேசுகையில், ” திகில் படங்களின்  தீவிர ரசிகனான எனக்கு இந்திய சினிமாவில் நம்மை உண்மையிலே பயமுறுத்தும் பேய் படங்கள் நிறைய வரவில்லை என்ற வருத்தம் என்றுமே இருந்தது. இதனாலேயே நானும் மிலிண்ட் ராவும் ‘அவள்’ படத்தை செய்ய முடிவெடுத்தோம். நானும் மிலிண்ட் ராவும் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். நானும் மிலிண்ட் ராவும், மணி ரத்னம் சாருக்கு உதவி இயக்குனர்களாக ஒரே சமயத்தில்  சேர்ந்தோம். நிஜ வாழ்க்கை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ‘அவள்’. இக்கதை, பொதுவாக திகில் படங்கள் மற்றும் திகில் படங்களை பற்றிய மக்களின் மனநிலையை பற்றி  நிறைய ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். கடந்த சில காலமாகவே திகில் படங்கள் பற்றிய கண்ணோட்டம் மக்களிடையே மாறியுள்ளது. இதனை மாற்றி ‘The Conjuring’ , ‘Paranormal Activity’ , ‘ The Evil Dead’ போன்ற படங்களுக்கு இணையான திகில் படத்தை தர நானும் மிலிண்ட் ராவும் நினைத்தோம். இந்த எண்ணத்தில் பிறந்த படம் தான் ‘அவள்’.
இது ஒரு பயத்தில் உறையவைக்கும்  தீவிரமான திகில் படம். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அதுல் குல்கர்னியுடன் நடித்துள்ளேன். அவரது அர்ப்பணிப்பும்,இப்படத்திற்கான அவரது  சிந்தனைகளும் பெரும் பலமாக இருந்தது. ஆண்ட்ரியா இப்படத்திற்கு தூணாக இருந்தார். அவரது இந்த கதாபாத்திரம், அவரது சுவாரஸ்யமான  நடிப்பு வாழ்வில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும். வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் ‘அவள்’ தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திகில் விருந்தாக நிச்சயம்  இருக்கும் ” என்றார்