அக். 6ஆம் தேதி வெளியாக தயாரான படங்கள் நவம்பர் 3ஆம் தேதி ரிலீஸ்!

தமிழ்நாடு அரசு அறிவித்த கேளிக்கை வரியை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என அறிவித்தது. அதனால், அக்டோபர் 6ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சில படங்களின் வெளியீடு தயாரிப்பாளர் சங்கத்தினரின் வேண்டுகோளை ஏற்று தள்ளி வைக்கப்பட்டன. தற்போது அந்த படங்களை நவம்பர் 3ஆம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதியன்று விழித்திரு, மெர்லின், ஓவியாவை விட்டா யாரு, அழகின் பொம்மி, இங்கிலீஷ் படம், திட்டி வாசல், உறுதி கொள் உள்ளிட்ட சில படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. திடீர் வேலை நிறுத்ததம் காரணமாக அந்த படங்களின் வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டதால் படக் குழுவினர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

விழித்திரு படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் வேலைநிறுத்தம் அறிவிப்பு வந்ததும் தனது ஃபேஸ் புக் பக்கத்தில், “திடீரென அறிவித்த ஸ்டிரைக் காரணமாக உருவாகும் பொருளாதார நஷ்டத்தைப் பற்றிப் பேசத் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். படத்தின் வியாபாரம் தொடர்பான பிரச்சனையின் பொருட்டு இங்கு வருவது இதோடு சேர்த்து எத்தனையாவது முறை என்று நினைவில்லை. படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தேடிக்கூட இத்தனை முறை அலைந்ததில்லை. சினிமாவில் கூட்டாகச் சேர்ந்து இயங்குவதுதான் பலம். அது தான் ஆகப் பெரிய பலவீனமும். அறமற்ற சில மனிதர்களுடன் பழகுவதாலும் பணிபுரிவதாலும் மனம் மிகவும் களைப்படைகிறது. யாரோ ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இது போல் தங்களது வேதனையை வெளிப்படுத்தாத இயக்குநர்களும் உண்டு. இதனால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவே தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த முடிவெடுத்துள்ளது. தீபாவளிக்கு வரும் படங்கள் எப்படியும் இரண்டு வாரமேனும் ஓட வாய்ப்புள்ளது. அதனால், அக்டோபர் 6ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் வேறு போட்டியின்றி வெளியாக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 6ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்களை மட்டுமே நவம்பர் 3ஆம் தேதியன்று வெளியிட ஒத்துழைப்பு கொடுக்குமாறு மற்ற தயாரிப்பாளர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே ஒரு மாதம் தள்ளி வெளியாகும் படங்கள் மற்ற படங்களின் போட்டியில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.