திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

தமிழில் மிக முக்கியமான இரண்டு படங்களான ‘கற்றது தமிழ்’ மற்றும் ‘தங்கமீன்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராமின் 3வது படைப்பு தரமணி. முதல் படத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் நிலையும் அடுத்த படத்தில் இக்கால கல்வி முறையை பற்றியும் காட்டிய இயக்குநர் ராம், தரமணியில் உலகமயமாக்கலால் ஆண்-பெண் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். டீசர் முதல் விளம்பரம் வரை அனைத்தும் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ‘தரமணியின் வழியாக கீழடி வரை’, இயக்குநர் ராம் அளித்த பேட்டி சுருக்கமாக..

ஏன் ‘தரமணி’?

வடசென்னை, தென் சென்னை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கு. தரமணிக்கு அந்த பக்கம் புதிய சென்னை ஒன்று இருக்கு. பன்முக கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி தரமணி. அது ஒரு குளோபல் வில்லேஜ். ஆனா இது தரமணி என்ற பகுதியை பற்றிய படம் இல்லை. எல்லார் பற்றியான கதையாக இது இருக்கும்.

இந்த படம் எதை பற்றி பேசும்?

தரமணி படம் ஆண்-பெண் உறவு பற்றி பேசும். இன்றைய தலைமுறை சந்திக்கிற உறவு ரீதியான பிரச்சனைகளை தரமணியில் காட்டியிருக்கிறோம். உலகமயமாக்களினால் தனி மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் என்ன என்ன அதன் விளைவுகள் பற்றி படமாக தரமணி இருக்கும்.

ஏன் உங்க எல்லா படத்திலும் உலகமயமாக்கல் என்பதை பற்றி சொல்றீங்க?

அதுக்கு காரணம் நான் உலகமயமாக்கல் நடந்துட்டு இருக்கிற ஊரில் தான் வாழ்கிறேன். படத்தில் அந்த கதை நடக்கின்ற காலக்கட்டத்தை காட்டும் போது நகரமயமாக்கல் தவிற்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. அந்த காலம் தான் படத்தின் நாயகனும், வில்லனுமாக இருக்கிறது. தனி மனித வாழ்க்கையில் வெற்றி, தோல்வினு அனைத்திலும் காலம்தான் நிர்ணயிக்கிறது. என் படத்துல கதை நடக்கின்ற காலத்தில் உலகமயமாக்கல் இருக்கிறதுனால அதை சொல்கிறேன்.

இந்த படத்திற்குள் ஆண்ட்ரியா எப்படி வந்தாங்க?

இந்த கதையை யோசிக்கும் போதே ஆண்ட்ரியா நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சோம். இதை அவரிடம் கூறினோம். ஆண்ட்ரியா கதையை படித்துவிட்டு நடிக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்திற்கான இன்ஸ்பிரேஷன் எதுவாக இருந்தது?

கண்டிப்பா இன்ஸ்பிரேஷன் இருக்கு. நானும் ஒரு ஆண் என்பது முக்கியமான விஷயம். பின் நான் படித்த புத்தகங்கள். மறுபடியும் போன்ற படங்கள்னு இந்த படத்திற்கு நிறைய விஷயங்கள் இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கிறது.

தொடர்ந்து 3வது படம் யுவனோடு வேலை செய்து இருக்கிறீர்கள்!இந்த படத்திலாவது யுவனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைக்கிறீங்களா?

விருது என்பது ஜூரிஸ் சம்மந்தப்பட்ட விஷயம். யுவன் எல்லா படத்துக்கும் ரொம்ப நேர்மையாக எப்படி கடின உழைப்பை கொடுக்கிறாரோ அந்த மாதிரி தான் இந்த படத்திலும் உழைச்சிருகாரு. ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகையை முயற்சி செய்வோம். கற்றது தமிழ் மாதிரி தங்க மீன்கள் இல்லை. தங்கமீன்கள் மாதிரி தரமணி இல்லை. முன்னாடி பண்ண படம் மாதிரி இசை ரீதியாக கூட இந்த படத்துல வந்துட கூடாது என்ற உறுதி இருந்தது. இதே தான் அடுத்த படத்தோட இசை அதற்கு முன் வந்த படத்தின் தாக்கதோடு இருக்க கூடாது என்று யுவனிடம் சொல்வேன்.

இத்தனை வருடங்களில் இரண்டே படங்கள், ஆனால் ரசிகர்கள் உங்களிடம் ஒரு நெருக்கத்தை உணர்வதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீங்க?

தமிழர்கள் எப்போதும் கலையையும் கலைஞர்களையும் கொண்டாடுபவர்கள். மற்ற பகுதிகளை விட தமிழ்நாட்டில் கலைஞர்கள் அதிகமாக மதிக்கப்படுகிறார்கள். என் படத்தின் மூலம் அந்த நெருக்கும் உண்டாகி இருக்கலாம். என் மீது காட்டப்படும் அன்பும் மரியாதையும் என் வேலைக்காக கிடைப்பதாக தான் எடுத்துக் கொள்வேன்.நான் சோர்வாக இருக்கும் போது கூட என்னை சந்திப்பவர்கள் பேசும் வார்த்தைகள் தான் எனக்கு உத்வேகத்தை தரும் விதத்தில் இருக்கும்.

தரமணியின் விளம்பரங்களில் நீங்கள் இணைக்கும் செய்திகள் வெறும் விளம்பர உக்தியா? அல்லது இதற்கும் படத்திற்கும் சம்மந்தம் உண்டா?

தரமணி என்ன படம் என்பதை பற்றி மக்களுக்கு தெரியாது. எனவே இந்த விளம்பரங்கள் மூலம் படம் இப்படி இருக்கலாம் என்று யோசிக்க வைத்து திரையரங்கிற்கு அழைத்து வரவேண்டும். மேலும் தினமும் படம் இந்த தேதியில் வெளியாகிறது என்பதை மட்டுமே விளம்பரத்தில் கூற முடியாது என்பதும் முக்கியமான காரணம். எனவே விளம்பர போஸ்டர்களில் நிகழ்காலத்தில் நடப்பவை குறித்து பேசுகிறோம்.

உதாரணத்திற்கு கீழடி பற்றி விளம்பரத்தில் கூறுகிறோம்.. இதனால் அதற்கும் படத்திற்கும் சம்மந்தம் இருக்கிறது என்று நினைத்தால் இருக்கிறது.. இல்லை என்று நினைத்தால் இல்லை. மேலும் இது வெறும் விளம்பர உக்தியாக மட்டும் பார்க்க முடியாது. நாம் காசு கொடுத்து திரையரங்கில் படம் பார்க்க செல்கிறோம். அதில் நடுவில் அரசு விளம்பரம் வருகிறது. அதே போல தான் எனது படத்தின் விளம்பரத்தில் ஜனநாயக ரீதியாக கேள்விகளை கேட்கிறேன். மேலும் திரைப்படத்தில் அரசியல் பேசும்போது திரைப்பட விளம்பரத்திலும் அரசியல் பேசலாம்.

திரைப்பட தணிக்கை எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறது?

தணிக்கை குழு நியாயமாக தான் நடந்து கொள்கிறது. அவர்கள் படங்களில் வரும் காட்சிகள் மக்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தான் யோசிக்கிறார்கள். பல கலாச்சரங்கள் கொண்ட ஒரு நாட்டில் இதையெல்லாம் யோசித்து தான் ஆக வேண்டும். தணிக்கை குழு ஒரு படத்தில் இது இருக்க கூடாது என்று கூறவில்லை. தரமணி படத்திற்கு ஏ சான்றிதழ் நியாயமானது என்று தான் நான் நினைக்கிறேன்.

ஏனெனில் இதில் வரும் சில காட்சிகள் குழந்தைகள் பார்க்க வேண்டாம். அது அவர்கள் பார்க்க வேண்டியவை அல்ல என்பது காரணம். ஒரு வீட்டில் பெற்றோர்களுக்குள் நடக்கும் சண்டை கூட குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் என்ற போது ஒரு திரைபடத்தில் அதை குழந்தைகள் அதை பார்க்கும் போது அதே தாக்கம் தான் ஏற்படும்.

தரமணியை எந்த எதிர்பார்ப்போடு பார்க்கலாம்?

இது வரை எந்த எதிர்பார்பையும் நான் உருவாக்கவில்லை. இந்த படத்திற்கு பிறகு என்னை நீங்கள் வெறுக்கலாம் ஆனால் ஒரு திரைப்படமாக தரமணி ரசிகர்களை ஏமாற்றாது என்று நினைக்கிறேன்.

அடுத்ததடுத்த படங்கள் பற்றி?

பேரன்பு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது அதன் பின்னணி இசைக்கான வேலைகள் நடைபெறுகிறது. விரைவில் முடிந்து இந்த வருடமே படம் வெளியாகும். பின்னர் சவரக்கத்தி. மிஷ்கினுடன் இணைந்து நானும் நடித்திருக்கிறேன். சரவக்கத்தி ஒரு நகைச்சுவை திரைப்படம்.

சந்திப்பு: ர.சௌந்தரியா