நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காண்ட்ராக்டருக்கு பொதுப்பணித்துறைவழங்கி உள்ளது. நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
வருகிற 21-ம் தேதி சிவாஜி பிறந்த நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது. முதல்வர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்துவைக்கிறார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், சிவாஜி குடும்பத்தினர் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு தரப்பில் வெளியான தகவல் படி, ‘ உலகமெங்கும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, சென்னையில் அரசு சார்பில் அழகிய மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. சென்னையிலுள்ள அடையாறு ஜானகி – எம்.ஜி.ஆர். மகளிர் கல்லூரி எதிரே, 24 ஆயிரம் சதுர அடி காணியில் சிவாஜி கணேசனுக்கு இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. இதில் 2 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
இதன் நடுவில் சிவாஜி கணேசன் சிலையை அமைப்பதற்கான பீடமும் கட்டப்பட்டு இருக்கிறது. சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை கொண்டு வந்து இங்கு நிறுவுகிறார்கள். சிலையை சுற்றி வரவும், மண்டபத்தை சுற்றிப் பார்க்கவும் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிரானைட் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் உயரம் 20 அடி. இதற்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நடைபாதையை சீரமைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது. சிவாஜி மணிமண்டபத்தை சுற்றி உள்ள பகுதியில் பூங்கா அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன” என்று தெரிய வந்துள்ளது