‘நிபுணன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது!

ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர் அர்ஜூனுடன் சேர்ந்து நடித்துள்ளனர் . டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நிபுணன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று நடந்தது. புதுமுக இசையமைப்பாளர் நவீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இப்படப்பாடல்கள் மிக அருமையாக இருப்பதாகவும் , நிச்சயம் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் என்று இப்படக்குழுவினர் கூறுகின்றனர்.

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நிபுணன் ‘ படத்தை ‘Passion Studios’ சார்பில் உமேஷ் , சுதன் சுந்தரம் , ஜெயராம் மற்றும் அருண் வைத்தியநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இயக்குநர் அருண் வைத்தியநாதன். ‘அச்சமுண்டு… அச்சமுண்டு’ மோகன்லால் நடித்த ‘பெருச்சாளி’ என்ற மலையாளப் படத்தையும் இயக்கியவர், தற்போது ‘நிபுணனுடன்’ மீண்டும் வந்திருக்கிறார். ‘நிபுணன்’ குறித்து கேட்ட போது, “‘நிபுணன்’ என்றாலே ஒரு விஷயத்தில் திறமை வாய்ந்தவன் என்று அர்த்தம். இப்படத்தில் அர்ஜுன் சார் ஒரு துப்பறியும் நிபுணர். “இதனால் இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்குப் பொருத்தமான கதாபாத்திரம் அவருடையது. இதுக்கிடையில் கொலைக் குற்றங்களைத் துப்பறியும் படங்கள் தமிழுக்கு புதிதில்லையே… இதில் என்ன வித்தியாசம்? என்று கேட்டால்

இப்படத்தில் துப்பறியும் நிபுணருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அர்ஜுன் சாருடைய அணியில் இருப்பவர்கள் நண்பர்கள். இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் வேலை ஒவ்வொருத்தருடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. க்ரைம் த்ரில்லராக மட்டுமே படம் இருக்காது. நிபுணன் என்பதால் அவருடைய வாழ்க்கையில் சறுக்கல்களே இருக்காது என்று சொல்ல முடியாது. குடும்பப் பிரச்சினைகள் இருக்கும், அதையெல்லாம் மீறி எப்படி ஜெயிக்கிறார் என்பதைக் காட்டியுள்ளேன்” என்கிறார்.