நடிகர்கள் : எம்.சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, எஸ்.மாதேஷ், மிதுன் போஸ், பாலாஜி சக்திவேல்,
இசை : ஜிப்ரான்
இயக்கம் : இரா சரவணன்
நம் நாட்டில் ஆதி காலத்திலிருந்தே தலித்திய ஒடுக்குமுறை நிகழ்ந்து வருகிறது. இப்போதைய காலகட்டத்தில் அது இல்லை என்று பேசப்பட்டாலும், இன்றும் கிராமப்புறங்களில் ஜாதிக்கொடுமை வலுவாகவே இருக்கிறது.
நம் அரசியல் அமைப்பு தலித்துக்களுக்கான உரிமையை தந்தாலும், சமூகம் அதைத் தரவில்லை.
கீரிப்பட்டி, பாப்பாட்டி பற்றி நாம் பத்திரிக்கையில் படித்திருப்போம். ஆனால் அதை அப்படியே அருகில் இருந்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஆம் அங்கு என்ன நடந்திருக்கும் என்பது தான் இந்தப்படம்
வணங்காமுடி என்ற கிராமத்தில் உயர்சாதியை சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்கள். தலைவர் பதவியைத் தனக்கான மரியாதையாகவும் பார்க்கும் பாலாஜி சக்திவேல், தன்னை எதிர்த்து யாரும் தலைவராக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
திடீரென அந்த தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் தான் தலைவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. இதனால் ஆதிக்க வர்க்கத்தினர் கொதித்து போகின்றனர். ஆனால் நமக்கு விசுவாசியாக சொல்வதை கேட்பது போல் அடங்கியிருக்கும் ஒருவரை தலைவர் நிறுத்த முடிவு செய்கிறார்.பாலாஜி சக்திவேல்
இதனையடுத்து பாலாஜி சக்திவேல் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சசிகுமாரை போட்டியின்றி தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சசிகுமார் கிராம நிர்வாக அதிகாரியான சமுத்திரக்கனியை சந்தித்து சில மக்கள் பணிகளைச் செய்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் முன்னாள் தலைவர், பாலாஜி சக்திவேல் ஊர் முன்னிலையில் சசிகுமாரை நிர்வாணமாக்கி அடித்து உதைக்கிறார். தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார். இறுதியில் சசிகுமார் மீண்டும் தலைவரானாரா? இல்லையா? பொது மக்களுக்கு நம்மை செய்தாரா? இல்லையா? என்பதே ’நந்தன்’
அம்பேத்குமார் என்ற கதாபாத்திரத்தில் யாரும் ஏற்கத் தயங்கும் ஒரு பாத்திரத்தில் துணிந்து நடித்திருக்கிறார் சசிகுமார். தன்னுடைய இமேஜை முற்றிலும் மாற்றிக் கொண்டு .தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வேறுபாடு காட்டி, வியக்க வைத்திருக்கிறார்.
சசிகுமார் மனைவியாக நடிக்கும் ஸ்ருதி சவாலான கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். பஞ்சாயத்துத் தலைவராக, நடித்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சிரித்தே கொண்டே கழுத்தரும் கதாபாத்திரத்தில் வில்லானாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிராம நிர்வாக அதிகாரியான சமுத்திரக்கனி,ஜிஎம்.குமார், ஸ்டாலின்,ஞானவேல்,மாதேஷ்,மிதுன்,சக்தி சரவணன், சித்தன் மோகன் உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. ஆர்.வி. சரனுடைய ஒளிப்பதிவு அந்த ஊரின் இயல்பை திரையில் பிரதிபலிக்கிறது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சாதி ஒடுக்குமுறை குறித்து முழுமையான ஆவணமாக திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இரா சரவணன். அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெறவேண்டிய அவசியத்தை சொல்லியிருக்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலவீனம் ஒரு ஆவணப்படத்தின் சாயலில் இருப்பது தான். முழுக்க வலி நிறைந்த வாழ்வை சொல்கிற படம், அவர்களின் வாழ்வின் சந்தோசங்களையும் சொல்லி, அதனூடே இதைச் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் இது முக்கியமான படம்.