‘சிக்லெட்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!

‘திறந்திடு சீசே’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘சிக்லெட்ஸ்’. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார். 2k கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் பி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஏ. சீனிவாசன் குரு தயாரித்திருக்கிறார். ஸ்வர்ணா ஸ்ரீ இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கிறார். இந்தத் திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.‌ இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் தமிழ் சினி கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் S.நந்தகோபால் வெளியிடுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்களும், நடிகர்களுமான ஆர். வி. உதயகுமார், பேரரசு, ‘மஞ்சள் வீரன்’ பட இயக்குநர் செல்லம், நடிகரும் தொழிலதிபருமான சூரிய நாராயணன், நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நடிகை அமிர்தா ஹல்தார் இயக்குநர் எம். முத்து, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார், தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தின் கதை விவாதம் கோவிட் காலகட்டத்திற்கு முன்னர் நடைபெற்றது. அந்தத் தருணத்தில் மற்றொரு திரைப்படத்தை உருவாக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம். அப்போது இப்படத்தின் இயக்குநரான முத்து அடிக்கடி என்னை சந்திப்பதுண்டு. அப்போது சிக்லெட்ஸ் படத்தின் கதையை சொல்லி, இப்படத்தை உருவாக்கலாம் என சொல்வார். நான் இதன் திரைக்கதையை வாங்கி என்னுடைய மகள் ஸ்வர்ணா ஸ்ரீயிடம் கொடுத்து படிக்குமாறு சொன்னேன். அவர் இந்த கதையைப் படித்துவிட்டு 2k கிட்ஸ்க்கான கதையாக இருக்கிறது. இதனை முதலில் தயாரிக்கலாம் என சொன்னார். அதன் பிறகு மீண்டும் இயக்குநர் முத்துவை அழைத்து, இப்படத்தின் கதையை சொல்லச் சொன்னேன். அவரும் கதையை விவரித்து பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு செய்து தரமான படமாக உருவாகி இருக்கிறோம். இந்த படம் பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார் .

Chiclets Movie Trailer Launch - Gallery - Social News XYZ | Fox kids, Movie trailers, Product launch

மஞ்சள் வீரன்’ பட இயக்குநர் செல்லம் பேசுகையில், ” ஒரு தயாரிப்பாளர் திரைப்படம் தயாரிக்கிறார் என்றால்.., அதற்குப் பின்னால் சினிமாவை நம்பி இருக்கும் எத்தனை குடும்பங்கள் வாழ்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தற்போதுள்ள கடினமான சூழலில் படத்தை தயாரித்திருப்பதற்காக தயாரிப்பாளரை நாம் மனதார பாராட்ட வேண்டும்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”

‘சிக்லெட்ஸ்’ படத்தின் டிரைலரை பார்த்தோம். வெரி நீட். இந்த காலகட்டத்திற்கு தேவையான அற்புதமான படம். ‘ஏ’வா.. ‘யு/ஏ’ வா.. என்பது வேறு. அப்பா- அம்மா- பிள்ளைகள் அண்டர்ஸ்டாண்டிங்கை பற்றி பேசுகிறது. அப்பா அம்மாவின் பேச்சை பிள்ளைகள் கேட்கிறார்களா..? அல்லது பிள்ளைகளின் பேச்சை அப்பா அம்மா கேட்கிறார்களா.. ? என்ற பிரச்சினையை பற்றி இப்படம் பேசுகிறது. இது ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கின்ற விசயம். விஞ்ஞான வளர்ச்சியில் பல சாஃப்ட்வேர்கள் வந்து வளர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அழிவையும் கொடுத்திருக்கிறது. உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மியை சொல்லலாம்.

இன்றைக்கு நாம் ஃப்ளாட்டுக்களில் தான் வசிக்கிறோம். தாய் ஒரு ரூம். தந்தை ஒரு ரூம். பிள்ளைகள் ஒரு ரூம். எல்லோரும் எப்பவாது ஒரு முறை தான் ஹாலில் ஒன்றாக இருப்பார்கள். அம்மாவுக்கு ஒன்னு.. அப்பாவுக்கு ஒன்னு.. பொண்ணுக்கு ஒன்னு.. பையனுக்கு ஒன்னு.. என ஆளாளுக்கு ஒரு செல்போனை கையில் வைத்திருக்கிறார்கள். போன் வந்தால் அம்மா சமையல் அறைக்கும், அப்பா ரூமிற்கும், பையன் தெருவுக்கும், பொண்ணு மொட்டை மாடிக்கும் சென்று பேசுகிறார்கள். யாருக்கும் யாருடனும் அண்டர்ஸ்டாண்டிங் இல்லை.

முன்பெல்லாம் அப்பா அம்மா.. பொண்ணு பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அப்போதெல்லாம் நிறைய கல்யாணம் நடந்தது. நல்ல பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அம்மா அப்பா தங்களுடைய பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் பொண்ணு திடீரென்று ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து, ‘இவர்தான் என் கணவன்’ என்று அறிமுகப்படுத்துகிறார். அப்பா- அம்மாவிற்கு முன் கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார்கள். இது வருத்தமாக தான் இருக்கிறது. இந்த வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இப்படத்தின் நாயகன் அறிமுக நடிகர் போல் இல்லாமல், அனுபவிக்க நடிகர் போல் நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் பேசி பிரமாதமாக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

இப்படத்தின் கதை பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அற்புதமான விசயத்தை சொல்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும். மேலும் தற்போது நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை ரசிகர்கள் வெற்றி பெற செய்கிறார்கள். ” என்றார்.