படிக்காத மேதை தயாரிப்பாளர் என். கிருஷ்ணசாமி!

படிக்காத மேதை படத்தின் தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசாமி (95) இன்று காலமானார் என்ற ஒரு வரிச் செய்தியை அடுத்து நம்ம சிறப்பு செய்தியாளர் கட்டிங் கண்ணையா திரட்டிய தகவல்கள் இதோ:

என்.கிருஷ்ணசாமி.

சினி டெக்னீஷியன் அசோசியேஷனின் செயலாளராக 1947-ல் பொறுப்பேற்று, பல சாதனைகளைச் சத்தமில்லாமல் செய்தவர் . அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, அந்தக் காலத்துலே படம் எடுப்பதற்குத் தேவைப்பட்ட கச்சா ஃபிலிம் இறக்குமதி விஷயத்தில் இவர் ஆற்றிய பங்கு. அதாவது கச்சா ஃபிலிம் இறக்குமதியின் அளவை மத்திய அரசு குறைச்சுப்புட்டுது. உடனே மத்திய அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியிடம் இதற்காக ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை என்.கிருஷ்ணசாமி வைத்தார். இதன் விளைவாக, ஏற்றுமதியாகும் இந்தியத் திரைப்படங்களுக்குக் கிடைக்கும் அன்னியச் செலவாணியில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு கச்சா ஃபிலிமை இறக்குமதி செய்துகொள்ளலாம் என்ற உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.

தூர்தர்ஷனுக்காகக் கர்னாடக இசை மூவர் உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களையும் எடுத்துத் தந்திருக்கிறார் என்.கே.

முதன்முதலாக வட இந்திய நடிகர்களையும் தென்னிந்திய நடிகர்களையும் ஒன்றிணைத்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தியவர் இஅவ்ரே . வட இந்திய நட்சத்திரங்கள் பம்பாயிலிருந்து வந்து செல்வதற்குத் தனி விமானத்தையும் ஏற்பாடு செய்தார். வட இந்திய அணிக்கு திலீப்குமாரும் தென்னிந்திய அணிக்கு வீணை எஸ்.பாலசந்தரும் கேப்டன்களாக விளையாடினர்.

1952-ல் சர்வதேசத் திரைப்பட விழாவை இந்தியா நடத்தும் என அன்றைக்கு நேருவின் அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான திவாகர் அறிவித்தார். பம்பாய், மெட்ராஸ், டெல்லி, கல்கத்தா ஆகிய நகரங்களில் நடத்துவதற்கு இந்தியா தயாரானது. காமராஜர் அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

இந்நிலையில் மெட்ராஸில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் திறந்த வெளி திரையரங்கத்தில் படங்களைத் திரையிட்டால் புதுமையாக இருக்கும் என்று சொன்னார் என்.கே. என்று அன்பாக அழைக்கப்படும் என். கிருஷ்ணசாமி. காமராஜருடன் அந்நாளில் நடத்திய உரையாடலை நினைவுகூர்ந்தார் என்.கே.

“எங்கே திறந்த வெளி அரங்கத்தைப் போடப் போறீங்க?” என்றார் காமராஜர்.

நம்ப காங்கிரஸ் மைதானத்துலதான் என்றேன் நான்.

“எப்படியோ மைதானத்துக்கு நிறைய பேர் வந்தா சரி” அப்படீன்னாராம் காமராஜர்.

மளமளவென்று காரியத்தில் இறங்கி, 40 அடிக்குச் சற்றே வளைவாக ஒரு திரையைத் தயாரித்திருக்கிறார். இதை வடிவமைப்பதிலும் லென்ஸின் அளவைத் தீர்மானிப்பதிலும்தான் திறந்த வெளித் திரையிடலின் சூட்சுமம் அடங்கியிருப்பதை அறிந்து அதை உருவாக்கியிருந்தார். தகரத்தில் பக்கவாட்டுச் சுவர்களுடன் திறந்த வெளி அரங்கம் உருவாகியிருக்கிறது.

திறந்த வெளி அரங்கம் உருவாகிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு அவருடைய முதலாளி ஜெமினி ஸ்டூடியோ வாசன் வந்து பார்த்து மிகவும் பாராட்டியிருக்கிறார். தகரத் தடுப்புகளுக்குப் பதிலாக, மரத் தடுப்புகளையும் தன் கலைஞர்களைக் கொண்டு செய்து தந்திருக்கிறார். அவருடைய கலைஞர்களால் சில நாட்களில் அந்த இடத்தின் தோற்றமே நவீனமாகியிருக்கிறது.

இதைஅடுத்து யூகிகி வாரிஸு (ஜப்பான்), பை சைக்கிள் தீவ்ஸ், கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த், ஆன் தி சர்க்கஸ் அரெனா ஆகிய வெளிநாட்டுப் படங்களும், நாகிரெட்டியின் பாதாள பைரவி உள்ளிட்ட இந்தியப் படங்களும் திரையிடப்பட்டிருக்கின்றன. இத்தாலியைச் சேர்ந்த டெஸிக்கா, ஃபிராங்க் ஒப்ரா ஆகிய பிரபல இயக்குநர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இப்படி திடீரென உருவான திறந்த வெளித் திரையிடலுக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு மெட்ராஸில் கிடைத்த வெற்றிக்கும் தகுந்த திட்டமிடலே காரணம். டெல்லியிலும் மெட்ராஸைப் போல் சர்வதேசத் திரைப்பட விழா வெற்றியடைய முழு ஏற்பாட்டையும் செய்யச் சொல்லி என்.கே.வை டெல்லிக்கு அழைத்துள்ளார் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் திவாகர். “டெல்லியில் விழா நடத்துவதற்கு ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் என்.கே. அங்கும் சர்வதேசத் திரைப்பட விழா சிறப்பான வரவேற்பைப் பெற்றதாம்.

இங்ஙனம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திறந்த வெளித் திரையரங்கத்தின் வெற்றியால் அதைப் பற்றிய கவனம் நாடு முழுவதும் பரவியது. எனவே 1981-ல் எம்.ஜி.ஆர். முயற்சியில் மதுரையில் நடத்தப்பட்ட ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் அரசரடி பகுதியில் திறந்த வெளி திரையரங்கை ஏற்படுத்திச் சில திரைப்படங்களைத் திரையிட்டிருக்கிறார் இவர்.

1952-ல் அனைத்திந்திய சினி டெக்னீஷியன் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் இவர். இந்த மாநாட்டை அன்றைய முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா தொடங்கிவைத்துள்ளார். இதில் தேவகி போஸ், சதாசிவ ராவ் கவி, கிருஷ்ண கோபி போன்ற புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களும் இயக்குநர்களும் கலந்துகொண்டார்களா,. இந்த விழாவில், இந்தியாவின் முதல் பெண் இயக்குநராக அறியப்பட்ட புரோத்திமா தாஸ் குப்தா பங்கேற்றிருக்கிறார்.

இவரது தயாரிப்பிலும் இயக்கத்திலும் வெளிவந்த முதல் படம் ‘ஒன்றே குலம்’ (1956) என்றும் அதில் மனோகர், குமுதினி, சந்திரபாபு, சகரஸ்ரநாமம் ஆகியோர் நடித்திருந்தனர். முன்னதாக தனது இயக்கத்தில் நடிப்பதற்காக வஹிதா ரஹ்மானிடம் முதலில் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். படம் குறித்த முறையான அறிவிப்பும் ‘ஸ்கிரீன்’ பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. அதைப் பார்த்த குருதத், தான் எடுக்கும் புதிய படத்துக்குப் புதிய நாயகியைத் தேடுவதாகவும். அந்தப் பாத்திரத்துக்கு வஹிதா பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியிருக்கிறார். வஹிதா ரஹ்மானும் என்.கே. படத்தில் நடித்துக்கொண்டே குருதத் படத்திலும் நடித்திருக்கிறார். அப்படி குருதத்தின் இயக்கத்தில் வஹிதா ரஹ்மான் நடித்த புகழ்பெற்ற படம்தான் ‘பியாஸா’.

இதனிடையே தன்னுடைய படங்களில் ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றும் ஹரிபாபு என்பவரின் வீட்டுக்கு ஒருமுறை என்.கே. போயிருந்தபோது அவரின் மனைவி எதையோ படித்தபடி, விசும்பிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறார்.

“என்ன படிச்சுட்டு இப்படி அழுகிறார்?” என்று ஹரிபாபுவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், “ஆஷா பூர்ணா தேவி எழுதிய ‘ஜோக் பியோக்’ என்னும் கதையை என்று பதில் தந்திருக்கிறார்.

அந்தக் கதை வங்காள மொழியில் திரைப்படமாகியிருப்பதையும் அறிந்திருக்கிறார். “அந்தக் கதையின் உரிமையை வாங்கி, தமிழில் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து, அந்தப் படத்தை எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது

என்.கே. அந்தப் படம்தான் ‘படிக்காத மேதை’.