‘முகவரி’ படத்தை இயக்கிய இயக்குநர் V.Z.துரை தற்போது ‘இருட்டு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சுந்தர் சி. முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுந்தர்.சி.க்கு ஜோடியாக வாஷி பர்விந்தர் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். மேலும் தன்ஷிகா, யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை – கிரிஷ் கோபால கிருஷ்ணன், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – R.சுதர்சன், வசனம் – இந்திரா சௌந்திரராஜன், கலை – A.K.முத்து, புகைப்படம் – சாரதி, வடிவம் – PK விருமாண்டி மற்றும் நிர்வாக தயாரிப்பு – APV மாறன்.
இருட்டு படம் பற்றி இயக்குநர் துரை பேசும்போது, “இந்த ‘இருட்டு’ திரைப்படம் ஏற்கனவே வெளியான பேய் திகில், த்ரில்லர் டைப் படங்கள் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இதுவரை வந்த எந்த படத்தின் கதையம்சங்களோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத வகையில் இந்த இருட்டு திரைப்படம் இருக்கும். மேலும், வித்தியாசமான கதை என்றில்லாமல் வித்தியாசமான கருத்தைத் தாங்கி வரவிருப்பதால் இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு அவரவர் தங்கள் நிஜ வாழ்க்கையோடு தொடர்பு ஏற்படுத்தியோ, ஒப்பீடு செய்தோ பார்க்கும் வகையில் இருக்கும்.
பேய் இருக்கிறதா? இல்லையா? என்றொரு விவாதம் நடந்துக் கொண்டிருந்தாலும், அதைவிட பயங்கரமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்று ஒரு சாரரும், அது எப்படி நடந்திருக்க முடியும்? என்று ஒரு சாரரும் விவாதம் நடத்தும் அளவிற்கு இப்படம் இருப்பதே இதன் சிறப்பம்சம். முதலில் நானும் சுந்தர்.சி-யும் இணைந்து ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தவுடனேயே சுந்தர்.சி. ‘நீங்கள் ஒரு திகில் படம்தான் இயக்க வேண்டும்’ என்று கூறினார்.
ஆனால், எனக்கு அது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு திகில் படம் என்றால் பயம். ஆகையால் நான் இதுவரை ஒரு பேய் படம்கூட பார்த்தது கிடையாது. இருப்பினும், சுந்தர்.சி. ‘உங்களுக்கு இயக்கும் திறமை நன்றாக இருக்கிறது. நீங்கள் திகில் படம் இயக்கினால் நிச்சயம் வெற்றி பெறும்’ என்று ஊக்கப்படுத்தினார்.
அவர் கொடுத்த ஊக்கத்தினால்தான் இந்த ‘இருட்டு’ படத்தை இயக்க சம்மதித்தேன். அதன் பிறகு, எல்லா மொழிகளிலும் உள்ள நிறைய பேய் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அனைத்துப் படங்களுமே மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில்தான் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதிலிருந்து சற்று வித்தியாசமாகவும், முற்றிலும் வேறுபாடு உள்ளதாகவும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் காரணமாக யோசிக்கும்போதுதான் இப்படத்தின் கருத்து உதித்தது. அந்தக் கருத்து எல்லோருடைய வாழ்விலும் ஒன்றி போகும் விதமாகவும் இருக்கவே, சுந்தர்.சி-யிடம் கூறினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போகவே, ரொம்ப நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். உடனேயே படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.
சுந்தர்.சி இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். இயக்குநராக இருந்தாலும், இப்படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப தன்னுடைய நடை, உடை, உடல்மொழி அனைத்தையும் மாற்றிக் கொள்ள பயிற்சி மேற்கொண்டார்.
இவருடைய மனைவியாக ஷாக்ஷி பர்விந்தர் நடிக்கிறார். தன்ஷிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது சினிமா வாழ்க்கையிலே இப்படமும், இப்படத்தில் வரும் தனது கதாபாத்திரமும் யாராலும் மறக்க முடியாததாக அமையும் என்றும் கூறியிருக்கிறார். முழுக்க முழுக்க திகில் படம் என்றாலும் நகைச்சுவையைத் தாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், VTV கணேஷும் பயணிப்பார்கள்.
படத்தின் பெரும்பங்கு காட்சிகள் ஊட்டியில் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தன்ஷிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் சூரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில காட்சிகளே மீதம் உள்ளன. அதையும் ஊட்டியிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறோம்..” என்றார்.