இந்த உலகமே ஒரு பிக் பாஸ்தான்! – திருட்டு பயலே 2 இசை விழாவில் சுசி. கணேசன்

2006ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘திருட்டு பயலே’. சுசி கணேசன் இயக்கிய இப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘திருட்டு பயலே’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவரவுள்ளது. இரண்டாம் பாகத்தை சுசி கணேசன் – ஏஜிஎஸ் கூட்டணி உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் விவேக், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், முத்துராமன், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பி.செல்லத்துரை.

விழாவில் படக் குழுவினரோடு நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டார். “நான் திருட்டு பயலே முதல் பாகத்தைப் பார்த்துள்ளேன். இரண்டாவது பாகத்தில் என்ன புதிதாக இருந்துவிடப் போகிறது என்று நினைத்தேன். படத்தின் சில கட்சிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க என்னை அழைத்திருந்தனர். அப்போது படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது பிரம்மாண்டமாக இருந்தது. படத்தின் கதை முதல் காட்சியிலிருந்தே தொடங்கிவிடுகிறது. மிகவும் புத்திசாலித்தனமாகத் திரைக்கதையை அமைத்துள்ளனர். படத்தின் நாயகன் பாபி சிம்ஹா எனக்கு நெருங்கிய நண்பன் மட்டுமல்ல, சிறந்த நடிகரும்கூட. அவன் ஒரு நல்ல நடிகன் என்பதை இந்தப் படம் காட்டும் என்று நான் நம்புகிறேன். பிரசன்னா, அமலா பால் இருவரும் இதில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறந்த படங்களைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் ” என்றார் விஜய் சேதுபதி.

“என்னுடைய திரை பயணத்தின் முக்கியமான தருணத்தில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று சொன்ன படத்தின் கதாநாயகி அமலா பால், “இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்து என் வாழ்கையில் விளக்கேற்றி வைத்துள்ள இயக்குநர் சுசி கணேஷ் எனக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். முதல் முறையாக இப்படத்தில் டப்பிங் பேசியுள்ளேன். மைனா படத்தைத் தொடர்ந்து மீண்டும் தங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு நன்றி” என்று கூறினார். தான் நடித்துள்ள முக்கியமான கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்

“இந்த படத்தில் நான் நடிக்க முக்கியமான காரணம் விஜய் சேதுபதியும் எஸ்.ஜே.சூர்யாவும்தான்” என்றார் நாயகன் பாபி சிம்ஹா. “சினிமா துறையில் என்னைப் பற்றித் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதையும் தாண்டி எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார் சுசி சார். படத்தின் திரைக்கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. என்னுடைய மறுபிரவேசத்துக்கு இந்தப் படம் முக்கியமான ஒன்றாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய கதாபாத்திரம் மிகவும் புதிதாக இருந்தது. நான் நடித்துள்ள படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளது பெருமையாக உள்ளது” என்றார்

இயக்குநர் சுசி கணேசன் படத்தின் கதையைப் பற்றிக் கோடிகாட்டினார். “இங்கு நாம் அனைவரும் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்படுகிறோம், இப்போது உள்ள தொழில்நுட்பத்தின் வாயிலாக நாம் எங்கு இருக்கிறோம் என்று கண்டுபிடிக்க முடியும்.ossபடத்தின் மையக்கதையைத் தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவருக்குப் பிடித்துப்போனது. அவர் உடனடியாக இந்த படத்தை தயாரிக்கச் சம்மதித்தார்” என்று கூறினார்.

தன்னுடைய படத்தின் நாயக, நாயகியர் பற்றியும் சுசி கணேசன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். “பாபி சிம்ஹா படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார் என்று பலர் கூறினார்கள். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் அதிகாலை ஐந்து மணிக்கே வந்துவிடுவார். அர்ப்பணிப்போடு நடிக்கும் சிறந்த நடிகர் இவர். என் படங்களில் நடித்த நடிகைகளுடன் படம் முடிவதற்குள் சண்டை போட்டுவிடுவேன். ஆனால் சண்டை போடாமல் நட்போடு நடித்தவர் அமலா பால். வித்யாசாகர் இசையில் படத்தின் பாடல்கள் மிக அற்புதமாக வந்துள்ளன” என்று கூறினார்.

இசை வெளியீட்டு விழாவில் புதுமையான ஒன்றாக, பாடல் உருவாக்கத்தின்போது இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்களுக்கு இடையில் நிகழும் விவாதங்கள் மேடையில் அரங்கேறியது. இதில் பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் பாடகர்கள் கார்த்தி, ஸ்வேதா மோகன், சஞ்சனா உள்ளிட்டோர் நேரடியாகப் பாடியது குறிப்பிடத்தக்கது.