அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது,
எல்லோரும் கூறியதைப் போல் எனக்கும் ரணம் ரொம்பவே முக்கியமான திரைப்படம். எல்லோரும் மிக நேர்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். இப்படம் ஒரு நல்ல த்ரில்லராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருக்கும். திரைக்கதை கிரிப்பாக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்குநர் செரீஃப் இக்கதை குறித்து என்னிடம் பேசும் போது, முழு ஸ்கிரிப்ட் இருக்கிறதா….?? என்று கேட்டிருந்தேன். அவர் உடனே வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார். எனக்கு கொஞ்சம் குழப்பமாகவும், சிறிது ஆச்சரியமாகவும் ஒரு புது அனுபவமாகவும் இருந்தது. வாய்ஸ் நோட் கேட்கும் போது எனக்கு அது உண்மையாகவே Inspiring ஆக இருந்தது. கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த ரணம் திரைப்படத்தின் மூலமாக எனக்கு ஒரு நண்பர்கள் குழு கிடைத்திருக்கிறது.. பாலாஜி, ஷெரீஃப், தயாரிப்பாளர் மது சார், வைபவ், என நிறைய பேர். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.
நடிகை தான்யா ஹோப் பேசும் போது,
எல்லோருக்கும் வணக்கம். இன்று முழுவதும் ரணம் அணியினருடன் இருந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் இப்படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள்:, பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் படத்தைப் பாருங்கள். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
இயக்குநர் ஷெரீஃப் அவர்கள் பேசும் போது,
அனைவருக்கும் என் முதல் வணக்கம். டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். கடைசியாக பேசுவதால் என்ன பேச என்று தெரியவில்லை. ஏனென்றால் என்ன பேச நினைத்திருந்தேனோ அதை முன்னாள் வந்தவர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள். நானும் பாலாஜியும் தான் இப்படத்தை துவங்கினோம். வேறொரு படத்தை துவங்கலாம் என்று நினைத்த போது லாக்-டவுன் துவங்கியது. புராஜெக்ட்டும் முடிந்து போனது. வாழ்க்கையில் அடி மேல் அடி.. அப்படி இருக்கும் போது ஒரு செய்தி கண்ணில்பட்டது.. இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இக்கதையை பேசலாம் என்று முடிவு செய்து ஆத்திச்சூடியில் இருக்கும் அரணை மறவேல் என்கின்ற வரிகளை டைட்டிலாக வைத்தோம்..கருத்து சொல்வது போல் இல்லாமல் நேர்மையாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். நமக்கு மெச்சூரிட்டி வந்தப் பின்னர் வாழ்க்கையில் வாழ்ந்து முடிக்கும் முன்னர் கண்டிப்பாக அறம் தர்மம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு வரும்.
பிள்ளைகளின் வெற்றி தான் பெற்றோரின் வெற்றி என்று கருதுகிறேன். ஏனென்றால் பெற்றோருக்கு தனிப்பட்ட வெற்றிகள் என்று ஏதும் கிடையாது. என் மனைவி, என் அம்மா, என் தங்கை என ஒட்டு மொத்தமாக என் குடும்பத்திற்கு மிக்க நன்றி. சில குறிப்பிட்ட இயக்குநர்களிடம் இருந்து வருபவர்கள் தான் சாதிக்க முடியும் என்று தவறான கருத்தாக்கம் இருக்கிறது. அது உண்மை இல்லை பொய் என்று நிருபிக்க விரும்பினோம்,. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
நாயகன் வைபவ் பேசும் போது,
சக்திவேலன் பேக்டரி சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி. சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஷெரிஃப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஷெரிஃப் பற்றி இப்பொழுது தான் தெரியும். என்னிடம் யாரிடமோ வேலை பார்த்தேன் என்று தான் கூறினார். ஆனால் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து இப்பொழுது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் ஷெரிஃப் வருவார். மது சாரை தமிழ் சினிமா உலகிற்கு வரவேற்கிறேன். உதய் என்னிடம் கணவன் மனைவி சண்டை போடுவது போல் சண்டை போடுவார். இன்று கூட ஒரு சண்டை நடந்தது.. ஒளிப்பதிவாளர் பாலாஜி அவர்களுக்கு நன்றி;. அவரின் பெயரை திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவர் மனைவி இன்று உயிரோடு இல்லை. தாஸ் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள்..
தளபதி படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில் இருந்தே எனக்கு கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.