தமிழ் சினிமா எத்தனையோ தயாரிப்பாளர்களைக் கண்டிருந்தாலும் இவர் போல் யாருமில்லை என்று கடந்த முப்பதாண்டு களுக்கும் மேலாக கோலிவுட்டில் சிலாகிக்கப்படுபவர் கலைப்புலி எஸ். தாணு. ஆரம்பத்தில் கறுப்பு – வெள்ளப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து, சினிமாத் தொழிலில் காலடி வைத்தவர். பின்னர், பல்வேறு படங்களின் உரிமையைப் பெற்று விநியோகஸ்தராக வளர்ந்தவர். பைரவி' படத்தில் நடித்த ரஜினிக்கு,
சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வழங்கியவர்…தான் தயாரித்த படமோ அல்லது ரிலீஸ் செய்யும் படமோ அதை தன்னுடைய பிரமாண்ட சிந்தனைகளுடன் நவீன் வணிக யுக்திகளை புகுத்தி அப்படத்திற்கு இமாலய வெற்றிகளையும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டுகளை கொடுத்த பெருமை மிக்கவர் தாணு.
இன்று பிறந்த நாள் காணும் அவருடன் ஒரு மினி நேர் காணல்:
பள்ளி காலம் முதலே எனக்குள் கலைதாகம் இருந்தது. பேச்சுபோட்டி, பாட்டு போட்டி என பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வென்றுள்ளேன். முன்னொரு காலத்தில் வடசென்னை வண்ணாரப்பேட்டையில் குடித்தனம் இருந்தோம். அங்கே, பாம்பே ஹோட்டல் அருகில் பெரிய சுவரில், வண்ண வண்ண சினிமா போஸ்டர்கள் ஒட்டியிருப்பதை ஆச்சர்யமாகப் பார்த்து, ஒருநாள் நாமும் இதேபோல் பிரமாண்டமான போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்று கனவு காண்பேன். அப்படியாக சினிமா மீதான காதலால் இளம் வயதிலேயே தமிழ் திரைப்பட விநியோகஸ்தராக இத்துறையில் நுழைந்தேன். முதல் படத்தில், “வருவாளோ தேவி, தெரு ஓரம்” என்று ஒரு பாடல் எழுதிருக்கிறேன். பின், “நல்லவன்” படத்தில், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்னேன். சில காலம் கழித்து இயக்கத்தை விட்டுவிட்டு, தயாரிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்து பல படங்களை தயாரிக்கத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் ஒரு வினியோகஸ்தராகத்தான் எனது சினிமா பயணம் தொடங்கியது. அது வியாபார யுக்தியை எனக்குக் கற்று தந்தது. நான் படங்களை விளம்பரப்படுத்துவதில் முக்கிய கவனம் செலுத்துவேன். என் படங்களில் தனித்துவத்தை எதிர்ப்பார்ப்பேன். திட்டமிட்ட அதே பட்ஜெட்டில், பிரம்மாண்டத்தை காட்டுவேன். “நான்கு ஷீட்யில் 100 போஸ்டர்ஸ் செய்வதற்குப் பதில், அதனை எட்டு ஷீட்டாக்கி, 50 போஸ்டர்ஸ் செய்வேன். ஹீரோக்களின் முகம் மட்டும் இருப்பது போன்ற 50 அடி கட்அவுட் வைத்திருக்கிறேன். ஆரம்பகாலத்தில் யார் படத்தின் விளம்பரத்திற்காக, ஒரு குழந்தை அழுவதுபோல் போஸ்டர் ஒட்டினோம். காரணம், அது ஏ- சர்ட்ஃபிகேட் படம். அதற்கு தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று குழந்தை அழுவது போல சித்தரிந்திருந்தேன்.
இத்துறைப் பற்றிய தெளிவான புரிதல், அனுபவம் என்னை ஒரு வினியோகஸ்தரிலிருந்து தயாரிப்பாளராக மாற்றியது. சினிமாத்துறை மீதான் அதீத ஆர்வமே இன்றுவரை எனக்கு உத்வேகத்தை தந்து, மரியாதைக்குரிய ஒரு நிலையான இடத்தை எனக்கு தந்துள்ளது. இந்த தொழிலுக்குள் வந்ததில் இருந்து தேடலும், உழைப்பும்தான். காலை 6 மணிக்கு எழுந்து சாமி கும்மிட்டு வேலை தொடங்குவதிலிருந்து, இரவு 1 மணி வரை, படத்தைப் பற்றிய அதே சிந்தனைதான் என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். முழு ஈடுபாட்டுடன் என் பணியைச் செய்வேன்.
இப்போது ஒரு சமயத்தில் பல படங்கள் வெளிவருகின்றன். கடந்து ஐந்தாறு வருடங்களாக, 100 படங்களில் 90% சதவீதம் தோல்வியை சந்திக்கின்றன. வருடத்திற்கு 10 படங்கள் தான் ஓரளவு ஓடுகிறது, அதில் 2 சூப்பர் ஹிட் ஆகும், 3 படங்கள் சராசரியாக ஓடும். கட்டுமானமும் கட்டுபாடும் இல்லாத தொழில் என்பதால் இத்துறையில் பலர் தொழில் புரிய நுழைந்து விடுக்கிறனர். சிலர் முதலீடு செய்த பணம் வந்து விடும், பிரச்சனையில்லை என்று நினைக்கின்றனர். சிலர் தானே இயக்குவது, தானே தயாரிப்பது, தானே நடிப்பது என மொபைல்களிலே படம் எடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால், முக்கியத்துவத்தை அறியாமல், ஆர்வத்தில் களம் இறங்கிவிடுகின்றனர். அனுபவமின்மையே இதற்கு முக்கியக் காரணம்.
இதை எல்லாம் புரிந்த நிலையில் எத்தனைப் படங்கள் வெளிவந்தாலும், நம் படம் தனித்து இருக்க வேண்டும். எந்த விதத்திலும் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடாது. விளம்பரத்திலும், வசூலிலும் புரட்சியை உருவாக்க வேண்டும் என்றே நினைப்பேன்..
இப்படியாப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவுக்கு இன்று (25.06.2019) பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கு தமிழ் திரையுலகமே நேரிலும் தொலைபேசியிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறது.
நாக் ஸ்டுடியோ நிர்வாகி கல்யாணமும் கலைப்புலி தாணுவுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.
அந்த வரிசையில் சினிமா பிரஸ் கிளப் சார்பில் கலைப்புலி தாணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!