சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம்!

சிவகார்த்திகேயன் புதிய தோற்றத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளார். சீமராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. செப்டம்பர் 13ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் தயாராகும் இந்தப் படத்திற்கான சிவகார்த்திகேயனின் தோற்றம் எப்படி இருக்கும் என அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் அறிமுகமானதில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தையும் நடிப்பையும் மெருகேற்றிக்கொண்டே வருகிறார். அதனால் அவரது படங்களுக்கான ஓப்பனிங் மற்றும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரிப்பது சாத்தியமாகிறது.

இந்த நிலையில், கோட் சூட்டில் நீள முடி மற்றும் தாடியுடன் உள்ள புகைப்படத்தை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். ரவிக்குமார் இயக்கும் புதிய படத்திற்கான லுக் இதுவா என ஆச்சரியப்படக்கூடாது என்பதற்காகப் புகைப்படத்தின் பின்னணியையும் சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார். கனா படத்தின் கதாநாயகன் தர்ஷன் பரிந்துரைத்ததன் பேரில் அருண் டைடன் ஸ்டுடியோவில் முன்திட்டமிடல் இல்லாமல் உடனடியாக நடந்த போட்டோ ஷீட் இது என்று குறிப்பிட்டுள்ளார். காஸ்டியூம் டிசைனர் அனு பார்த்தசாரதிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.