‘ மேகம் செல்லும் தூரம்’ – என்ற பெயரில் மியூசிக்கல் ஆல்பம் ஒன்றை இயக்குநர் ஷங்கரின் ‘2.0’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் குமார் இயக்கியுள்ளார். 11 நிமிடங்கள் கொண்ட இந்த மியூசிக்கல் காதல் கதை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் யூடியூப் –பில் ரிலீஸாகியுள்ளது. ஒரு இளம் புகைப்படக் கலைஞரின் பயணத்தை பின்னணியாகக் கொண்ட இப்படம் இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் மியூசிக்கல் கதையின் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண். இவர் ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 17 வயது இளம் இசையமைப்பாளர் ஜெட்ரிக்ஸ் இசையில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது மேலும் இதில் பாடலாசிரியராக பத்திரிகையாளர் ம.மோகன், எடிட்டர் அருள் மொழி செல்வன், பாடகர் கவுஸ்துப் ரவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். சென்னை மகாலட்சுமி திரையரங்க உரிமையாளர் சைலேந்தர் சிங் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஆல்பம் குறித்து
இயக்குநர் விக்னேஷ் குமார் கூறியதாவது :
‘‘பலரும் இப்போ சர்வ சாதாரண விஷயத்துக்குக் கூட ‘பிரேக் – அப்’னு பிரிஞ்சிடுறாங்க. அந்த ஈகோவை தூக்கிப் போட வைக்கணும்கிறதுதான் இந்த ஆல்பத்தோட கரு. பாடல் பின்னணியில் உருவாகும் இந்தக் கதையை டிராவல் பின்னணியில் எடுக்கலாமே என்று ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், சென்னை, நீலகிரின்னு வெவ்வேறு லொக்கேஷன்களில் படமாக்கினோம். படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா லொக்கேஷன்களிலும் வானம் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். அது இந்த கதையோட ஓட்டத்துக்கு தேவைப்பட்டது. இளைஞர்களை நம்பி இந்தப் ஆல்பத்தை தயாரித்த சைலேந்திர் சிங் சாருக்கு நன்றி’’ இவ்வாறு தெரிவித்தார்.
அறிமுக இசையமைப்பாளர் ஜெட்ரிக்ஸ் கூறும்போது,
‘‘கதையை கேட்கத் தொடங்கும்போதே இது பயணப் பின்னணியாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அதே மாதிரிதான் இயக்குநரும் கதையைக் கூறி முடித்தார். அடுத்த நிமிடமே பாடலுக்கான இசை வேலையை தொடங்கிவிட்டேன். பாடல் படமாக்கப்பட்டு வந்ததும் பின்னணி இசையமைக்க அவ்வளவு அற்புதங்கள் விஷுவலில் இருந்தன. குறிப்பாக மகிழ்ச்சி, எமோஷனல், கோபம், வலி என்று கலவையாக காட்சிகள் இருந்ததால் பின்னணி இசையமைக்கும் வேலையும் அழகான அனுபவமாக விரிந்தது. இந்தப் பணிக்கு இப்போது பாராட்டுகள் கிடைத்து வருவது நெகிழ்ச்சியடையச் செய்கிறது’’ என்றார்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரண் கூறியதாவது :
‘’பாடல் மற்றும் வசனம் கலந்து ஒரு ஆல்பம் உருவாகும்போது கேமரா வேலைகளில் நிறைய ஸ்கோர் பண்ண முடியும். கேமரா மற்றும் ஜிம்பால் மட்டுமே கொண்டு இயற்கை வெளிச்சத்தில் படமாக்கப்பட்ட ஆல்பம் இது. பாலைவனம் முதல் பசுமையான மலைப் பின்னணி வரைக்கும் கதையோடு கலந்ததால் ஒளிப்பதிவு வழியே ஒரு வாழ்வியலை பிரதிபலிக்க முடிந்தது’’ என்றார்.
எடிட்டர் அருள் மொழி வர்மன் கூறுயதாவது :
எனக்கு இது ஒரு நல்ல அனுபவம். இயக்குநர் விக்னேஷ் குமாரின் முதல் குறும்படம் தொடங்கி இந்த ஆல்பம் வரைக்கும் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன். அவரது உழைப்பு, ஈடுபாடு ஒவ்வொரு முறையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த ஆல்பத்தின் ஒளிப்பதிவாளர் சரண் பங்களிப்பு மிகச் சிறப்பு. தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் குழுவினருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’’ இவ்வாறு தெரிவித்தார்.
பாடலாசிரியர் ம.மோகன் கூறும்போது,
‘‘காதல் பாடல் பெரும்பாலும் மகிழ்ச்சி அல்லது சோகம் சார்ந்ததாக அமையும். அதுவும் காதலன், காதலி சார்ந்து ஒரு நேர்க்கோட்டில் இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் காதலின் வலி, இளைஞனின் லட்சியத் தேடல், பெண்ணின் மனநிலை, பயண அனுபவம், காதலின் புரிதல் என்று ஒரே களத்துக்குள் பல அனுபவங்கள் பாடல் வரிகளில் கொண்டு வர வேண்டியிருந்தது. இன்று பாடல் வெளியானதும், ‘என்னைத் தேடினேன்.. எனக்குள்ளே தேய்கிறேன்’ போன்ற வரிகளுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்றார்.