சீதக்காதி – விஜய் சேதுபதி பட டைட்டிலுக்கு எதிர்ப்பு?

0
477

விஜய் சேதுபதி நடிப்பில் 25-வது படமான ‘சீதக்காதி’ பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடித்துவரும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சரஸ்காந்த், இசையமைப்பாளராக கோவிந்த் பி.மேனன், எடிட்டராக கோவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 16 அன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணிதரன் ‘சீதக்காதி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே கடந்த 300க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழகத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதி என்ற சொல்வழக்கு புழக்கத்தில் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீதக்காதி பெரும் வள்ளல், வணிகர், சேதுபதி மன்னரின் அமைச்சரவையும் அலங்கரித்ததோடு மட்டுமின்றி இந்து-இஸ்லாமிய சமய நல்லிணக்கத்திற்கும் பாடுபட்டவர். இதனால் ‘சீதக்காதி’ திரைப்படத்தின் தலைப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து சேதுபதி-சீதக்காதி உறவின்முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் தீன் கூறியதாவது:

”ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகர் சேகு அப்துல் காதர் என்பவரின் பெயர்தான் சீதக்காதியாய் மருவியது. இலங்கை, சீனா, மலேயா, அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கப்பல் மூலமாக சீதக்காதி ஏற்றுமதி செய்ததற்கான ஆவணங்களை டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தை ஆண்ட மன்னன் கிழவன் சேதுபதி, சீதக்காதிக்கு விஜயரகுநாத என்ற பட்டத்தையும், மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடற்கரைகளில் முத்து குளிப்பதற்கான வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் வழங்கியதோடு மட்டுமின்றி தனது ஆலோசகராகவும் பணியமர்த்திக் கொண்டார். சீதக்காதி, உமறுப் புலவர் சீறாப்புராணத்தை இயற்றுவதற்கும் நிதி அளித்தவர். கர்ணனைப் போல கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் சீதக்காதி என்று சைவப் புலவர் பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்ளார்.

சீதக்காதி என்றால் தமிழர்கள் அனைவருக்கும் நினைவிற்கு வருவது வள்ளல் சீதக்காதிதான். ‘சீதக்காதி’ திரைப்படம் மேடைக்கலைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தாலும் வள்ளல் சீதக்காதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் காட்சிகளை அமைக்க வேண்டும்” என்றார் அஜ்மல் தீன்.