அமீர் தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. முத்துகோபால் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு, விவுரி குமார் இசையமைத்துள்ளார். ஜெயப்பிரகாஷ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, டிராபிக் ராமசாமி, சுப.உதயகுமாரன், வளர்மதி, கார்ட்டூனிஸ்ட் பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கார்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செய்யக் கூடாது. நான்கு படங்கள் நடித்துவிட்டு இன்று நாட்டையே ஆளத் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உங்களுடைய திரைபிம்பத்தை எங்களை ஆட்சிசெய்ய அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
அடுத்து பேசிய பொதுநல மாணவர்கள் எழுச்சி இயக்கத்தைச் சார்ந்த வளர்மதி, “போராட்டங்கள் எங்களைப்போன்ற ஆட்களால் நடைபெறவில்லை. மக்களை அரசாங்கம்தான் தூண்டுகிறது. ‘இருபது ரூபாய் பஸ் டிக்கெட்டை நாற்பது ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். எங்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழிதெரியவில்லை’ என்று மதுரை சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் சொல்கிறார். இப்படி சாலைக்கு வரும் மக்களை லத்தியால் அடித்து விரட்டுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் நாங்கள் திருப்பி அடிக்கமாட்டோம் என்கிற தைரியம். நிச்சயமாக இந்தச் சூழல் மாறும்.
தினசரி உழைக்கும் மக்களுக்கான சினிமாவாக இங்கே எத்தனை சினிமாக்கள் வருகின்றன? அவற்றை பூதக் கண்ணாடி போட்டுத்தான் தேடவேண்டும். விவசாயிகள் பிரச்னையை எடுத்துக்கூறும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ போல எத்தனை சினிமாக்கள் இங்கு உள்ளன. எத்தனை பெண்களுக்கு சினிமாத் துறையில் வாய்ப்பளிக்கிறீர்கள்? அவர்கள் ஒரு கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். இங்கு சாமன்ய மக்களின் வலியை, வேதனையைப் பேசக்கூடிய படங்களை எடுங்கள்; அதற்கான தீர்வுகளைப் படமாக எடுங்கள். அத்தகைய படங்களை நாங்கள் கடன் வாங்கியாவது பார்த்துவிடுவோம்” என்றார்.
“மக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த 84 வயதில் இப்படியான போராட்டங்களை மேற்கொள்கிறேன். இது எனது ஆசான் ராஜாஜி எனக்குக் கற்றுகொடுத்தது. பயமின்மை, தைரியம், தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் ராஜாவாக வாழலாம்” என்று பேச்சைத் தொடங்கிய டிராஃபிக் ராமசாமி தொடர்ந்து பேசியவை அனைத்தும் அதிரடி ரகம்.
“இந்த அரசு அவர்களுடைய அம்மாவுக்கு நினைவு மண்டபம் வேறு கட்டப் போகிறார்களாம். ஒரு குற்றவாளிக்கு அரசியல் சாசனத்துக்கு எதிராக நினைவு மண்டபம் கட்டுகிறார்கள். அதற்கு எதிராக வழக்குப் போட்டுள்ளேன். யாராக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் அவர்களுக்கு நான் வேலை செய்ய கத்துத்தருகிறேன். நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை செய்ய வைக்க வேண்டும். கவர்னரே ஊர் ஊராகப் போய் பெருக்குகிறார். இரண்டு பெண்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு இருக்கார். அவருக்கு அதுவா வேலை? உட்கார்ந்த இடத்தில் இருந்து வேலை வாங்கணும் ஆளுநர்.
“தமிழக அரசியல் நிலைமை மாறப் போகிற நாள் வெகு விரைவில் உள்ளது. அதற்கு மக்கள் அனைவரும் முன்வந்து போராட வேண்டும். உங்கள் பின்னால் என்னைப்போன்ற ஆட்கள் இருப்பார்கள். இன்று அரசியல்வாதிகளால் ட்ராஃபிக் ராமசாமி என்ற பெயரிலேயே ஒரு படம் வர இருக்கிறது. சினிமாவில் உங்க வேலையை நல்லவிதமாகச் செய்யுங்கள். ஜெயலலிதா ஆணவத்தால் அழிந்தார். மக்களும் நல்லவர் யார் என்று பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று பரபரவென பேசினார் டிராஃபிக் ராமசாமி.
சுப. உதயகுமார் பேசுகையில், “ஒகி புயலால் 2000 பேர் காணாமல் போனார்கள். புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் தரவில்லை. இன்று அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியர் ஒரு வாரம் கழித்து வருகிறார், முதல்வர் இரண்டு வாரம் கழித்து வந்தார், பிரதமர் மூன்று வாரம் கழித்து வருகிறார், மத்தியக்குழு நான்கு வாரம் கழித்து வருகிறது. மக்களைக் காப்பாற்றுவதுதானே அரசாங்கத்தின் வேலை. இது யாருக்கான அரசு? யாருக்கோ லாபம் தரும் திட்டங்களை வெறும் தரகு வேலை செய்யும் ஒரு அமைப்பாகத்தான் மத்திய மாநில அரசுகள் வேலை செய்கின்றன.
தமிழகத்தில் இனி சினிமா அரசியல் வேலைக்கு ஆகாது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலே போட்ட சத்துணவிலே முட்டை போட்டதுதான் புரட்சித் தலைவர் ஆட்சி. இலவச ஆடு, மாடு கொடுக்கிறோம் என்பதுதான் புரட்சி தலைவி ஆட்சி. அதேபாணியில் வருகிற சினிமா அரசியலை தமிழக மக்கள் ஏற்கக் கூடாது. ரஜினி, கமல்ஹாசன் யார் வந்தாலும் நாங்கள் எதிர்ப்போம். தமிழக மக்களை இந்திய ஏகாதிபத்யத்தின் அடிமைகளாக மாற்றும் வேலையைத்தான் இந்த நடிகர்கள் செய்ய இருக்கிறார்கள். மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதில் கலைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. பொழுதுபோக்குக்காக இருக்கும் சினிமாவிலிருந்து வருபவர்கள் கோட்டையைப் பிடிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. திரைப்படங்களை மக்கள் விழிப்பு உணர்வுக்காக பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமீர், “இன்றைய கால கட்டத்தில் நடிகர்கள் சமூகத்திற்கு தேவைப்படும் கதைகளில் நடிப்பார்களா என்றால் சத்தியமாக நடிக்க மாட்டார்கள். விஜய், அஜித் பெரிய இடத்துக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் சமூகம் சார்ந்த கதையில் நடிக்க விரும்ப மாட்டார்கள். ரூ.100 கோடி வியாபாரத்தை அவர்கள் எட்டிவிட்டார்கள். வளரும் நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு, அவர்களும் வியாபாரத்தை நோக்கிச் சென்று விடுகின்றனர். விஜய், அஜித் சமூக அக்கறை உள்ள கதைகளில் நடித்தால் நாம் எல்லாம் நடிக்க வேண்டியதோ, இங்கு வந்து பேச வேண்டிய தேவையோ இல்லை. இந்த விழாவை நான் ஆர்யா, ஜெயம்ரவி போன்ற நடிகர்களை வைத்து நடத்தியிருக்க முடியும். ஆனால், சினிமாவில் வருபவர்கள் எல்லோரும் நிஜ ஹீரோக்கள் கிடையாது. நிஜ ஹீரோக்களை வைத்து விழா நடத்த வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் இவர்களை இங்கு அழைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துவிட்டு, மேடையிலிருந்தவர்களைப்பற்றி தனித்தனியே பேசத் தொடங்கினார்.
“டிராபிக் ராமசாமியைக் கண்டு வியந்தவன் நான். மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் வாழ்ந்த போயஸ் கார்டனுக்குச் சென்று பேனர்களை கிழித்தவர். இப்போது அரசியல் பேசுபவர்களுக்கு டிராபிக் ராமசாமியின் துணிச்சலுக்கு கால் தூசு வருமா? அரசியலைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தொடங்கி இன்னும் திரைத்துறை அரசியல்தான் உள்ளது. ரஜினி, கமல், அடுத்து விஜய் அரசியலுக்கு வருவதற்குத் தயாராக உள்ளனர். அச்சமில்லை அச்சமில்லை பட விழாவுக்கான மேடை பா.ஜ.கவை எதிர்க்கவோ, ரஜினி, கமலின் அரசியலை எதிர்க்கவோ அல்ல. முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் எனக்கு அதிருப்தி இருந்தது. அமைச்சர்களைப் பேசவிடாமல் ஜெயலலிதாவே சட்டசபையில் பேசுகிறாரே என்று நினைத்தேன். ஆனால், அமைச்சர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்கு நன்கு தெரிந்ததால்தான் யாரையும் பேசவிடாமல் 110 விதியின் கீழ் அவரே படித்தார். இதுபோன்ற அமைச்சர்களை விட ரஜினி, கமலையே சாபக்கேடாக ஏற்றுக்கொள்ளலாம்.
சகாயம் அரசியலுக்கு வர வேண்டும். ஏன் அவர் வர மறுக்கிறார் என்று தெரியவில்லை. சமீபத்தில் போக்குவரத்துக் கட்டணத்தைத் தமிழக அரசு அதிகரித்துவிட்டது. ஆனால், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.46 கோடி எங்கிருந்து வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை, அது மேல்தட்டு மக்களுக்கானது கிடையாது. மேல்தட்டு மக்கள் ஓட்டும் போடுவதில்லை. சினிமாவும் பார்ப்பதில்லை. சினிமா பாமர மக்களுக்காகவே எடுக்கப்படுகிறது. இவற்றைப் பேசினால் மதம் குறித்து பேசுவார்கள். முஸ்லிமாக இருப்பதால் என்னை பாகிஸ்தானுக்கு போகச் சொல்கிறார்கள். என் நாட்டைவிட்டு நான் ஏண்டா போக வேண்டும்?
இந்த மேடையைப் பாருங்கள். இதில் மத அடையாளங்கள் ஏதாவது தெரிகிறதா? நீங்கள் தான் போலியாக வாழ்ந்து வருபவர்கள். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அமர்ந்திருந்து ஜெபம் செய்த சாமியார், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அமர்ந்திருந்து ஜெபம் பண்ண மாட்டாரா?” என்று முழுக்க முழுக்க தமிழக அரசியல் நிலையையும், நடிகர்களின் அரசியல் ஆசை குறித்தும் பேசியவர் கடைசியாகத் திரைத்துறையில் செயல்படும் சங்கங்கள் ஆளும்கட்சியை அண்டிப் பிழைக்கும் சங்கங்களாகவே இருக்கின்றன என்று அந்தப்பக்கமும் ஒரு விமர்சனத்தை முன்வைத்து பேச்சை முடித்தார்.