துருவ நட்சத்திரம் படக்குழுவுக்கு வந்த சோதனை!

0
433

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்து வருகிறார். கவுதம் மேனின் ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கியது. அடுத்ததாக இதன் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் பல்கேரியா, ஜார்ஜியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. அடுத்ததாகப் படத்தின் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க துருக்கி செல்வதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்க்காக ஜார்ஜியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் பயணம் செய்த படக்குழுவைத் துருக்கி எல்லையில் தடுத்து நிறுத்தி விட்டனர்.

உடனே இது குறித்து கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 24 மணி நேரமாகத் துருக்கி எல்லையில் அனுமதி வழங்கப்படாமல் படக்குழுவினர் காக்க வைக்கப்பட்டுள்ளனர். கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் மற்றும் நடிகர்களின் உடைகளுடன் ஜார்ஜியாவில் இருந்து இஸ்தான்புல் நகருக்குச் சாலை வழியாகப் பயணித்த படக்குழுவினரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் துருக்கி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள படக்குழுவினர் உயர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள சிரமமாக உள்ளது. எனவே இந்த பதிவை படிக்கும் யாராவது அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறியிருந்தார்

அவரது ட்வீட் செய்த சில நிமிடங்களிலே இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “துருக்கி நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான துருக்கி ஏர்லைன்ஸ் தமிழ்த்திரைப்படக் குழு பிரச்சினையில் உடனே தலையிட்டு படக்குழுவை துருக்கிக்குள் அழைத்துச் செல்ல சம்மதித்தனர். இந்திய நிறுவனமான பிளேமிங்கோ டிராவல்ஸ் மற்ரும் ஜார்ஜிய நிறுவனம் ஒன்றிணைந்து துருக்கிய அதிகாரிகளிடம் பேசி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தனர். தற்போது படக்குழு இஸ்தான்புல் நகரத்தை அடைய தயாராக உள்ளது.’துருவ நட்சத்திரம்’ படத்தின் காட்சிகள் இங்கு படமாக்கப்படுகிறது. துருக்கி மற்றும் இந்தியக் குழுவினர் இந்தச் சிக்கலை சுமுகமாகத் தீர்த்தததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்.”இவ்வாறு படக்குழு தெரிவித்துள்ளது.