ஜேம்ஸ் பாண்ட பட வரிசையில் 25-வது படமாக உருவாகும் ‘பாண்ட்25’ படத்தில் தனது காதலியை திருமணம் செய்துகொள்வது போல் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஹாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆக்ஷன், ரொமான்ஸ், திரில்லர், லேட்டஸ்ட் டெக்னாலஜி என அனைத்து அம்சங்களும் கலந்து ஹாலிவுட் ஜனரஞ்சக படமாக ஜேம்ஸ் பாண்ட் அமைந்து இருக்கும். அந்த வகையில் பாண்ட் வரிசைப் படங்களில் 25-வது படம் விரைவில் உருவாக உள்ளது. இதில் தற்போதைய ஜேம்ஸ் பாண்டாக திகழும் நடிகர் டேனியல் கிரேக், பாண்டாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் படத்தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து நாள்தோறும் புதிய பாண்ட் படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்தப் புதிய படத்தின் கதையானது, முந்தைய பாண்ட் படம் ‘ஸ்பெக்ட்ரே’-இன் தொடர்ச்சியாக குரோட்ஷியா நாட்டில் நடக்கும் என கூறப்பட்டு இருந்தது. மேலும் படத்தின் படப்பிடிப்பு குரோட்ஷியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப் படத்தின் கதைக்கரு குறித்து ஹாலிவுட்டில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றனர். அதில் ஒன்றாக, படத்தில் தனது காதலியாக வரும் டாக்டர். மேடலின் ஸ்வானை திருமணம் செய்து கொண்டு சீக்ரட் ஏஜெண்ட் பணியை விட்டு விலகுகிறார் பாண்ட். இதையடுத்து ஸ்வான் வில்லன்களால் கொல்லப்பட, பின்னர் அவர்களை தேடி பாண்ட் பழிவாங்குவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக 1969-இல் வெளியான ‘ஆன் ஹெர் மெஜஸ்டி சீக்ரெட் சர்வீஸ்’ படத்தில் பாண்டாக நடித்த ஜார்ஜ் லாஸன்பி, அந்தப் படத்தின் கதாநாயகி டயானா ரிக்கை திருமணம் செய்துகொள்வது போலவும், பின்னர் டயானாவை கொன்ற வில்லன்களை பழிவாங்குவது போலவும் கதை அமைந்து இருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது அது போன்றதொரு கதையம்சத்தில் ‘பாண்ட்25’ படம் உருவாக இருப்பதாகக் ஹாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.