2011-ம் ஆண்டு ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் பெரிதும் பேசப்பட்டார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். அந்தப் படத்தைத் தமிழகத்தில் திரையிடு வதற்குள்ளாக பல பெரும் சோதனைகளை தாங்கிய இயக்குநருக்கு படம் பெரிய பெயரெடுத்தாலும் சரியாக வாய்ப்புகள் அமையாமல் போய்விட்டது. ஆனால் இப்போது 6 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு தனியொரு மனிதனாக ‘ஒன்’ என்றொரு படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படம் பற்றி இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இது :
“என்னுடைய முதல் படமாக நான் இயக்கி வெளியிட்ட ‘வெங்காயம்’ திரைப்படம் தமிழ்ச் சினிமாவின் மரபுகளை தாண்டி முழுக்க. முழுக்க கிராமத்து மக்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றது.
தற்போது நான் ‘ஒன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். ஒற்றை மனிதனால் யாருடைய உதவியையும் சிறிதும் பயன்படுத்திக் கொள்ளாமல் தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடிக்க முடியுமா..? என்ற கேள்விக்கு ‘முடியும்’ என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.
ஆம்.. கதை எழுதுவதில் தொடங்கி திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, காஸ்ட்யூம், ஒப்பனை, எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ் இசை உட்பட ஒரு திரைப்படம் உருவாக தேவையான அனைத்து துறை வேலைகளையும் நான் தனி ஒருவனாகவே செய்து முடித்திருக்கிறேன்.
அதை நிரூபிக்கும்வகையில், நான் வேலை செய்த அனைத்தையும் தொடக்கம் முதல் இறுதிவரை மற்றொரு மேக்கிங் கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
ஒரே நபரால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் உண்டு. அனைத்து கதாபாத்திரங்களிலும் நானே வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறேன். வயதான தோற்றம் உட்பட சில கதாபாத்திரங்களை மோசன் கேப்சர் முறையில் செய்திருக்கிறேன்.
இதற்காக ஒகேனக்கல், தலக்கோணம் போன்ற அடர்ந்த காடுகளிலும், இமயமலையின் பனிப் பிரதேசங்களிலும் தனியாக தங்கியிருந்து படப்பிடிப்பு செய்தேன். இதன் க்ளைமேக்ஸ் காட்சியை அமெரிக்காவில் எடுத்து முடித்தேன்.
3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்ய நேர்ந்ததால் ஏற்பட்ட சிக்கல்களால் 4 ஆண்டுகள் ஆனது. எனினும் இந்தியாவிலேயே முதல் முயற்சியாக இந்தப் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருப்பது எனக்கு பெரும் மன நிறைவை தருகிறது.
தமிழக அளவில் ‘வெங்காயம்’ படம் முன்னுதாரணமாக அமைந்ததை போல இந்திய அளவில் இந்த படம் பல இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கர்கள் உருவாக தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன்.
இந்த முயற்சிக்கான நோக்கம், ‘வெங்காயம்’ படத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல, இந்தப் படத்திலும் மக்களுக்கு தேவையான முக்கியமான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
இதைப் போல வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் மக்களை எளிமையாக சென்றடைகிறது. ஆகவே நான்காண்டு கடுமையான உழைப்பிற்கு பிறகு இப்படம் பெரும் நிறைவாக வந்திருக்கிறது. விரைவில் திரையிட திட்டமிட்டிருக்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.