விவேகம் – ஆகஸ்ட் 24 ரிலீஸ்!

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜீத் நடித்துள்ள படம் விவேகம். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அஜீத்துடன் பாலிவுட் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, சென்சாருக்கு விண்ணப்பித்தி ருந்தார்கள். இந்த சென்சார் முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. இதனிடையே ‘விவேகம்’ வெளியீட்டு தேதிக்காக பல்வேறு திரைப்படங்கள் தங்களது வெளியீட்டை இறுதி செய்ய முடியாமல் இருந்தார்கள். ஒரு வழியாக இன்று (ஜூலை 31) காலை தணிக்கை அதிகாரிகள் ‘விவேகம்’ படத்தைப் பார்த்து சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து தற்போது ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தற்போது இதர படங்கள் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் 2-ந்தேதி அஜீத் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 25 வருடங்கள் ஆகிறது. அதனால், தற்போது இணையதளத்தில் 25 இயர்ஸ் ஆப் அஜீத் -என்கிற ஹாஷ்டாக் மூலம் பிரபல்யம் ஆகி வருகிறார்கள்.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படம் குறித்து இயக்குநர் சிவா, “ மூன்றாவது முறையாக தல-ய வைத்து டைரக்ட பண்ண சான்ஸ் கிடைத்ததும் என்ன மாதிரி படம் பண்ணலாம் என்று பேச்சு வந்தபோது, சர்வதேசத் தரத்தில் படம் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். அஜித் சாருடைய பலம் என்ன, மாஸ் வேல்யூ என்ன என்பதை மனதில் வைத்து ஒரு நல்ல கதையை ஒரு புதிய களத்தில் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் செய்திருக்கிறோம். இந்த ‘விவேகம்’ வெளிநாட்டில் நடைபெறும் கதையாக இருந்தாலும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட கதைதான். இந்திய உணர்வுகள், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் ஆகியவற்றைச் சர்வதேசக் கதைக் களத்தில் கூறியுள்ளேன். ‘ஸ்பை த்ரில்லர்’ வகையில் இப்படம் இருக்கும். இந்த வகையில் தமிழ்த் திரையுலகில் அதிகப் படங்கள் வந்ததில்லை” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.