பாரதிராஜாவின் இளமைக்கு காரணம் தெரியுமா? – ரஜினி சுவாரஸ்ய பேச்சு!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய பெயரில் ஒரு திரைப்படக் கல்லூரியை துவக்கியிருக்கிறார். பாரதிராஜா சர்வதேச திரைப்படக் கல்லூரி என்ற பெயர் சூட்டப்பட்ட இந்தக் கல்லூரியின் துவக்க விழா  நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கலமஹாசன், கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர். தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர். சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை என அவர் புகழாரம் சூட்டினார். பின்னர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், தேசிய விருது தேர்வு செய்வதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். தேசிய விருது தேர்வுக்குழுவில் 12 பேர் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

விழாவில் பேசிய வைரமுத்து மண்ணுக்கு பெருமை சேர்க்கும் படங்களை பாரதிராஜாவின் புதிய பயிற்சி பட்டறை உருவாக்கும் என நம்புகிறேன். மிக வேகமான தொழில்நுட்ப உலகத்தில் தலைமுறைகள் மாறிக்கொண்டே உள்ளன. மண்ணின் கலைஞர், ஊர் வாசம், மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தவர் பாரதிராஜா. திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாக நான் பாரதிராஜாவை உணர்ந்தேன் என அவர் தெரிவித்தார்.

Briic (76)

விழாவில்  ரஜினி பேசும்போது, “நான் முதல்ல பாரதிராஜாவை ‘பாரதி வாசு’ன்னுதான் கூப்பிடுவேன். அப்புறம் ஒரு நாள் இளையராஜா, பாரதிராஜாவோட வயதைச் சொன்னார். அதுக்கப்புறம் பாரதிராஜாவை ‘ஸார்’ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். இப்போ அவரோட உண்மையான வயசைச் சொன்னா, எல்லாரும் சாஷ்டாங்கமா அவர் கால்ல விழுகணும்.

அவர் இப்பவும் இத்தனை இளமையா இருக்காருன்னா.. அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கு. ஒண்ணு, அவர் பிறந்து வளர்ந்த மண்ணு.. அந்த புழுதிக் காட்டுல விளைஞ்சதை சாப்பிட்ட சோறுதான்.. இதுதான் முதல் காரணம். இரண்டாவது காரணம், அவர் சுவாசிக்கிறது.. ஜீவிக்கிறது.. வாழ்றது எல்லாமே சினிமாலதான். இன்னமும் அந்த சினிமாவைத்தான் செஞ்சுக்கிட்டிருக்காரு. அதுதான் அவரோட இளமையின் ரகசியம்.

வாழ்க்கைல நல்லாயிருக்கணும்னு நினைச்சா கடுமையா உழைக்கணும். அப்பத்தான் வாழ்க்கைல நல்லாயிருக்க முடியும். முதுமைல ஆரோக்கியமாயிருக்கணும்னு நினைச்சா அப்பவும் பிஸியா இருக்கணும். பாரதிராஜா இப்பவும் பிஸியா இருக்கார். அவர் மனசுக்குப் பிடிச்ச  சினிமா துறைல ஒரு வேலையை செஞ்சுக்கிட்டிருக்காரு.

rajini

பாரதிராஜா ஸாரை எனக்குப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். ஆனா பிடிக்காது. ஒரு பேட்டில படிச்சிருக்கேன்.. ‘ரஜினியை பத்தி உங்க கருத்து என்ன..?’ என்று அவர்கிட்ட கேட்டிருக்காங்க. ‘அவர் நல்ல நடிகர்.. இல்லை.. குட் மேன்.. நல்ல மனுசன்’னு சொல்லியிருக்காரு.

என்னை எப்போ பார்த்தாலும் ‘எப்படிய்யா?’ன்னு ஆச்சரியமா கேப்பாரு. ‘எப்படிய்யா உன்னை ஏத்துக்கிட்டாங்க?’ன்னு கேப்பாரு..! நான் நல்ல நடிகன்னு அவர் என்னைக்குமே ஒத்துக்க மாட்டாரு.

அவர்கூட இதுவரைக்கும் இரண்டு படங்கள்லதான் நடிச்சிருக்கேன். ஒண்ணு ‘பதினாறு வயதினிலே’.. அப்போ கால்ஷீட் கேட்டு அவரே வந்தார். இரண்டாவது அவரோட சொந்தப் படம் ‘கொடி பறக்குது’. அப்போ இவர் வரலை. பஞ்சு ஸார்தான் கால்ஷீட் கேட்டு வந்தார். இந்த விழாவுக்குத்தான் அவரே வந்து கூப்பிட்டார்.

பிலிம் இன்ஸ்டிட்டியூட்டின் அருமை எனக்குத் தெரியும். ஏன்னா நானும் அங்க படிச்சவன்தான். இங்க நிறைய பேர் அவருக்காக வந்திருக்காங்கன்னு சொன்னாங்க. இண்டஸ்ட்ரில அவரைத் தெரியாதவங்க யாருமே கிடையாது. வந்துதான் தீருவாங்க.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிக, மிக நெருக்கமாக இருந்தார். அவரோட கடைசிக் காலத்துல ஏதாவது பிரச்சினை, பேசணும்னு சொன்னா ‘பாரதிராஜவை கூப்பிடுய்யா’ன்னு சொல்லி இவரைக் கூப்பிட்டு மணிக்கணக்கா பேசிக்கிட்டிருப்பாரு. கொஞ்சிக் குலாவுவாறு.

யாரோ சொன்னாங்க.. ஒரு ஹீரோயினைகூட இவர் லவ் பண்ணலைன்னு..! இவர் மனசு கள்ளங் கபடமில்லாத அன்பு.. முரட்டுத்தனமான அன்பு. அதனால்தான் எல்லாரும் இங்க வந்திருக்காங்க. இது இவரோட வாழ்க்கைல செஞ்ச மிகப் பெரிய சாதனை.. விஷயம்ன்னு நான் நினைக்கிறேன். இப்போல்லாம் நடிகர்கள் நிறைய பேர் வந்திருக்காங்க. ஆனால் எத்தனை பேர் நிக்குறாங்கன்னுதான் பார்க்கணும். சில பேர் கேமிரா முன்னாடி நிக்கணும். அவங்களை கேமிராவுக்குப் பிடிக்கணும். கேமிராவுக்குப் பிடிச்சாலும் அதுல அழகா தெரியணும். சில பேர் கேமிராவுக்கு முன்னாடி அழகா இருப்பாங்க. ஆனால் கேமிரால அழகா இருக்க மாட்டாங்க. சில பேர் கேமிரால அழகா இருப்பாங்க. ஆனால் நேர்ல சுமாரா இருப்பாங்க. இதையும் தாண்டி கேமிரால நடிச்சிட்டாலும் அவங்களை மக்களுக்குப் பிடிக்கணும். மக்களுக்குப் பிடிக்கலைன்னா அவ்ளோதான். மக்களுக்குப் பிடிச்சிட்டா அவங்க என்ன செஞ்சாலும் அவங்க ஏத்துக்குவாங்க. பிடிக்கலைன்னா அவங்க என்ன செஞ்சாலும் பிடிக்காது. அப்படியொரு மாயாஜாலம் அது..

இந்த விழாவுக்கான இன்விடேஷனைகூட அழகா அடிச்சிருந்தாங்க. அவரே ஒரு பல்கலைக் கழகம்தான். அவருடன் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்களும் ஏற்கெனவே அவர்கிட்ட படிச்சுட்டுத்தான் இருந்தாங்க. இப்போ அபீஷியலா ரிஜிஸ்தர் பண்ணி இந்த இண்ஸ்ட்டியூட்டை ஆரம்பிச்சிருக்காரு.

பிலிம் இன்ஸ்டிட்டியூட்ல படிக்கும்போது நிறைய அனுபவங்கள் கிடைக்கும். தவறுகளை தெரிஞ்சுக்கலாம்.. தொடர்புகள் கிடைக்கும். அரசியலுக்கு தகவல்கள்தான் ஆயுதம். அதுதான் முக்கியம். அதே மாதிரி சினிமாவுக்கு தொடர்புகள்தான் முக்கியம். இங்க அது பாரதிராஜாவால கிடைக்கும்.

இண்டஸ்ட்ரில அவருக்குத் தெரியாத ஆட்களே கிடையாது. அவர் மேல அப்படியொரு மதிப்பையும், மரியாதையும் உருவாக்கி வைச்சிருக்காரு. ஸோ, இவர் ஆரம்பிச்சிருக்கிற இந்த இன்ஸ்டிட்டியூட் மிகப் பெரிய அளவுக்கு பல்கலைக் கழகமா மாறி, நல்ல பெயரெடுத்து.. ஒரு முன் மாதிரியா இருக்கணும்ன்னு ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்..” என்றார்.

விழாவில் பாரதிராஜா பேசும்போது, “தென்னக சினிமாக்களில் சிறந்த இயக்குநருக்காக பாரதிராஜா விருது என்ற பெயரில் ஒரு விருதினை வருடந்தோறும் வழங்கப் போவதாக” அறிவித்தார்.