அந்தக் காலத்திலேயே ஹாரிபாட்டர் படமெடுத்த விட்டலாச்சார்யா!

சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத் தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம். ‘மாய மோதிரம்’, ‘ஜெகன் மோகினி’ போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக் கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை.

அதாவது நம்ம சின்ன வயதில் நம் பாட்டி சொல்லும் மந்திரக் கதைகளில் இடம்பெறும் வரிகள்,

ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி அங்க ஒரு குகை இருக்கும். அந்த குகையில ஒரு கூண்டு, அந்த கூண்டுக்குள்ள ஓரு கிளி இருக்கும். அதுல தான் அந்த மந்திரவாதியோட உயிர் இருக்கு. கற்பனைக் கதைகளும் மந்திர தந்திரக் கதைகளும் கேட்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் அலாதியானது. இதுபோன்ற கதைகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்தான் மாயாஜால மன்னன் இயக்குநர் விட்டலாச்சாரியா.

தெலுங்குத் திரையுலகில் அதிகமான படங்களை இயக்கிய விட்டலாச்சாரியா, பெரும்பாலான படங்களை அவரது ‘விட்டல் புரொடக்‌ஷன்ஸ்’ மூலமாக தயாரித்தார். ஜகன் மோகினி, மாயா மோகினி போன்ற மோகினிகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இவரையே சேரும். பயங்கர உயரமான சிலை சிரிப்பது, பாய் பறப்பது, வித்தியாசமான மந்திரச் சொற்கள் என விட்டலாச்சாரியா படங்கள் விநோதமான அனுபவத்தை தரும். ஜெகன் மோகினியையும் ஜெயமாலினியையும் மறக்கமுடியாத ஐயாக்கள் இங்கே ஆயிரம் ஆயிரம் பேர் உண்டு.

தெலுங்கில் தயாராகி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1978-ல் வெளியானது விட்டலாச்சார்யா இயக்கிய ‘ஜெகன் மோகினி’. இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியில் அதன் விஷுவல் எஃபெக்ட் உத்திகளுக்கு மிகப் பெரிய பங்கிருக்கிறது. தொழில்நுட்பம் வளராத எண்பதுகளின் தொடக்கத்தில் பாலிவுட்டில்கூட யாரும் யோசித்துப் பார்க்க முடியாத பல உத்திகளைப் பயன்படுத்தினார் விட்டலாச்சார்யா. விட்டலாச்சார்யாவின் படங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்றதால், என்.டி.ஆர் அளவுக்குத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார் ஜெகன்மோகினி படத்தின் நாயகனான நரசிம்ஹ ராஜூ.

விட்டலாச்சார்யாவின் பல படங்களில் மோகினியின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் இளவரசனாகவும், மன்னனாகவும் நடித்திருப்பார். ஜெகன் மோகினிப் பேயின் அழகில் மயங்கி, அதைத் திருமணம் செய்துகொள்வதும், அதனோடு வாழ்வதும், பிறகு மனைவி வந்து அம்மனிடம் வேண்டி, பாம்பு, குரங்கு, யானை, ஆடு உதவியுடன் மோகினியை விரட்டி கணவனை மீட்பதுமாக செம ரகளையாக நகரும் நகரும்..

ஜெகன்மோகினி என்றில்லை, விட்டலாச்சார்யா இயக்கிய மாயா ஜாலப் பேய் படங்களில் பேய் உருவத்தில் நடிப்பவர்கள் அணியும் விதமாகத் தலைமுதல் கால்வரை ஒரே உடையாக இருக்கும்படி வெள்ளை நிறத்தில் ஒரு உடையைத் தயார் செய்தார். இந்தப் பேய் உடைக்கு மண்டையோடு போன்ற முகமுடியும், செம்பட்டை நிறத்தில் நீண்ட தலைமுடியும் என்று பேய் என்றால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணவைக்கும் தோற்றம் அது.

அந்தப் பேய் உருவம் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரித்துக்கொண்டே பயந்து ரசித்த காலம் அது. விட்டலாச்சார்யாவின் வெள்ளைப் பேய்கள் தங்கள் கால்களை எரியும் அடுப்பில் வைத்து விறகாக்கிப் பலகாரம் சுடுவதும், பிறகு அவை ஆடாகவும், கோழியாகவும், பெண்ணாகவும் சட்டென்று மாறுவதும் ரசிகர்களால் மறக்க முடியாத விஷுவல் எஃபெக்டுகள். அழகிய பெண்ணாக இருக்கும் உருவம் அடுத்த நொடி வெள்ளைப் பேயாக மாறும் ஆச்சரியம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தது.

இதைவிட அதிகம் ரசிக்கப்பட்டது எலும்புக் கூடுகளின் அட்டகாசம்! குழம்புக்கு அம்மிக்கல்லில் மசாலா அரைக்கும் எலும்புக் கூடு, திருமண மண்டபத்தில் தவிலும் நாதஸ்வரமும் வாசிக்கும் எலும்புக்கூடுகள் என்று மிரட்டிய விட்டலாச்சார்யா, எலும்புக்கூடுகளை இயக்கத் திறமையான பொம்மலாட்டக் கலைஞர்களைக் கொண்டு, நூல் கட்டி அவற்றை அசைத்துப் படமாக்கியுள்ளார். இதற்காகப் படப்பிடிப்புத் தளத்தின் பின்னணியில் பூசப்பட்டிருக்கும் நிறம் எலும்புக்கூடுகளை இயக்கும் நூலுக்கும் பூசப்பட்டது.

பாத்திரம் வைக்கப்பட்டு எரியும் அடுப்பைத் தனியாகவும், பிறகு பேய் வேடம் போட்டவரை எரியாத அடுப்பில் கால்களை வைக்கச் சொல்லி தனியாகவும் படம்பிடித்து, இரண்டையும் ஆப்டிகல் முறையில் பிலிம் லேப்பில் ‘ சூப்பர் இம்போஸ்’ செய்து இணைத்துவிடுவார்கள்.

ஒரு ஷாட்டை ‘மாஸ்க்’ செய்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை படம்பிடிக்க கேமராவிலேயே வசதியிருக்கிறது. இரு வெவ்வேறு படச்சுருள்களை இணைத்துத் தேவையான விளைவை, ஒரு புதிய படச்சுருளில் மறு ஒளிப்பதிவு செய்வது விட்டலாச்சார்யா அதிகம் பயன்படுத்திக்கொண்ட ஆப்டிகல் எஃபெக்ட் முறை.

படத்தின் பணிபுரிந்த கலைஞர்களின் பெயர்களை டைட்டில் கார்டாகப் போடுவதிலிருந்து, காட்சி மாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும், அதாவது ஒரு காட்சி மெல்ல மெல்ல மறைந்து மற்றொரு காட்சி தோன்றும் டிஸ்சால்வ் (Dissolve), ஒரு காட்சி

முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதை உணர்த்தும் உத்தியான (Fade Out.- Fade In ), கனவின் அரூப நிலையைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தவும், ஆவிகள் நடமாடுவது போலவோ, வானில் மேகத்தில் ஆவிகள் தவழ்ந்துசெல்வதுபோலவோ காட்டவும் உதவும் சூப்பர் இம்போஸ் (super impose) வரையில் ஒரு படக்காட்சியின் மேல் இன்னொன்று தெரிவதுபோலச் செய்வது எல்லாமே ஆப்டிகல் எஃபெக்ட்தான்

இவரது படங்களில் வரும் துஷ்ட தேவதைகள் கேட்கும் காணிக்கைகள் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். மாய மோகினி படத்தில் வரம் கேட்கும் மந்திரவாதியிடம் துஷ்ட தேவதை என்ன கேட்கும் தெரியுமா?… உலகத்திலேயே தாயை மிகவும் மதிக்கும் ஒருவனைத் தேடி அவன் கையாலேயே அவன் தாயை கொலை செய்ய வைக்கவேண்டும். இதுபோன்ற வசனங்களை கேட்கும்போதே நமக்கு பயம் தொற்றிக்கொள்ளும்.

இன்று ஹாரிபாட்டர் படங்களில் வரும் பறக்கும் துடைப்பத்துக்கு விட்டலாச்சாரியா தன் படங்களில் பயன்படுத்திய பறக்கும் நுட்பங்கள் முன்னோடியாக இருந்திருக்கலாம். JK Rowling விட்டலாச்சாரியாவின் விந்தைகளை பார்த்திருக்க வாய்ப்பிருக்கலாம். ஜகன் மோகினி படத்தில் வரும் அடுப்பில் கால் வைத்து எரிக்கும் காட்சி இன்றளவும் மீம்ஸ்களாக வலம் வருகிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான NTR-ஐ வைத்து ஐந்து படங்களுக்கும் மேல் இயக்கியிருக்கிறார். NTR-இன் பிரியமான இயக்குநர்களில் விட்டலாச்சாரியாவுக்கு என்று தனி இடம் உண்டு. சிறுவயது முதலே நாடகங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர் விட்டலாச்சாரியா.

இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குபெற்று சிறை சென்றிருக்கிறார். ‘மகாத்மா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் 1944 முதல் 1953 ஆம் ஆண்டு வரை பல்வேறு கன்னடப் படங்களை தன் நண்பர்களுடன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அதன்பிறகு 1953ஆம் ஆண்டு அது விட்டல் புரொடக்‌ஷனாக மாறியது. பல்வேறு ஆண்டுகளாக திரைத்துரை சார்ந்து இயங்கிய மாயாஜால மன்னனுக்கு இன்று (ஜனவரி 20) பிறந்த நாள். அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது மாயாஜாலங்கள் நம் மனதை விட்டு மறையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *