ஒத்த செருப்பு – விமர்சனம்!

ஒற்றை மனிதனாக சாதனை செய்யும் சோதனை முயற்சியில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே எழுதி நடித்து உருவாக்கியிருக்கும் படம். சினிமாவில் மட்டுமின்றி சகல துறைகளிலும் இம்மாதிரியான சோதனை முயற்சிகள் சர்வதேசம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழில் – குறிப்பாக கோலிவுட்டில் ரொம்பக் குறைவு தான். அந்த வகையில் இந்த ஒ. செ. படம் எப்படி இருக்கு என்று கேட்டால் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் இருப்பான் எப்போதும் அமைதியாக இருப்பான். ஆனால் அடுத்து இருக்கும் மாணவன் தன்னை நிரூபிக்கும் பொருட்டு ஆர்வக் கோளாரில் எதையாவது செய்து கொண்டே இருப்பான். அவை சில நேரங்களில் நன்றாக இருக்கும் பல நேரங்களில் வெற்று ஆர்வக்கோளாறாகவே முடிந்து விடும். அப்படித்தான் இருக்கிறது இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படமும்.

கிட்டத்தட்ட 110 நிமிடங்கள் கொண்ட இப்படத்தின் கதை என்னவென்று கேட்டால் கொலை விசாரணைக்கு ஒரு கைதி அழைத்து வரப்படுகிறான். அந்தக் கைதியின் மனைவி காணாமல் போயிருக்க, நோயில் வாடும் மகனுடன் இருக்கும் அவன், கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பிக்கையில் அக்கதை ஏகப்பட்ட கொலைக்களுக்கு காரணம் என்பது தெரிய வர, கொலை விசாரணையின் போக்கே மாறுகிறது. அப்புறமென்ன..அவன் ஏன் இத்தனை கொலை செய்தான். அவனுக்கும் அவன் மகனுக்கும் இறுதியில் என்ன நடக்கிறது என்பதே கதை.

முன்னொரு காலத்தில் தெருக்கூத்தாக ஆரம்பித்தது அரங்க நாடகமாக வளர்ந்து சினிமாவாகி யிருக்கிறது கலை. ஒரு வகையில் அனைத்து கலைகளையும் தின்று ஏப்பம் விட்டு வளர்ந்திருப்பது தான் இந்த சினிமா என்று சொல்வது கூட மிகையல்ல. அதன் சாத்தியக் கூறுகள் அளவில்லாதது. அதில் சோதனை முயற்சி எனும் பெயரில் இருக்கும் அதன் வசதிகள் புறக்கணிக்கப்படுவது சினிமா அல்ல அந்த கதைக்கே தேவைப்படமால் ஒதுக்கி அதை நாம் உணராமல் படத்தை ரசிக்க வைப்பது தான் சினிமாவின் அழகு. நம் தமிழில் அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக கமலின் பேசும் படம் இருக்கிறது. அப்படத்தில் வசனம் தேவையே பட்டிருக்காது.  ஆனால் ஒத்த செருப்பு இதிலிருந்து வேறுபட்டு வம்படியாய் சாதனை முயற்சி என்ற ஒற்றை சொல்லில் எஞ்சி நிற்கிறது.

ஒருவர் மட்டுமே நடித்து buried , cast away, lockey போன்ற பல படங்கள் இருக்கின்றன அவற்றில் மற்ற எந்த பாத்திரங்களும் இருக்காது கதையிலும் அதற்கு அவசியம் இருக்காது. ஆனால் படம் எங்கேயும் உங்களை அசைய விடாமல் இருக்கும். ஒத்த செருப்பு படத்தில் நிறைய பாத்திரங்கள் குரல்களில் வருகிறது ஆனால் கேமாராவில் வருவது பார்த்திபன் மட்டுமே. இது படத்தை சிறிது நேரத்திலேயே போரடிக்க வைத்து விடுகிறது.  ஒரு அப்பாவி விசாரணையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறான் என நினைக்கும்போது விசாரிப்பவர்களை முட்டாளாக்குகிறான் எனும் சுவாரஸ்ய முடிச்சு. அட என நம்மை ஆச்சர்யப்படுத்தாமல் சோதனை முயற்சியால் படம் பப்படமாகிவிட்டது.

அதிலும் இதில் தன் நடிப்புத் திறமை முதற்கொண்டு அனைத்தையும் காட்டிவிட வேண்டும் எனும் பார்த்திபனது ஆசை புரிகிறது. ஆனால் முழுக்க முழுக்க அவரையே பார்க்கும் ரசிகன் நிலமை தான் பாவமாக இருக்கிறது.

படத்தில் அப்பாவி மாசிலாமணி கதையை சொல்லும்போது இயக்குநர் பார்த்திபன் படம் முழுதும் துருத்திக் கொண்டே இருக்கிறார். அவரது பகடி வசனங்களும், பொழிப்புரை தேவைப்படும் ஜோக்குகளும் கொஞ்சம் அதிகம். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். அபாரமான உழைப்பு அத்தனையும் தாண்டி படத்தின் கதையை , அதன் உணர்வை நம்முள் கடத்தியிருக்கிறார்.

கேமரா கோணங்கள் நீண்ட ஷாட்டுகளையும் அழகாக்கியிருக்கிறது. எந்தக் கேரக்டரையும் காட்டாமல் அதன் உணர்வை மட்டும் ஒலியால் கடத்த முயன்றிருக்கிறார். ஆனால் அது பாதி தான் நிறைவேறியிருக்கிறது.

மொத்தத்தில் இதன் சைஸ் எல்லாம் ஓ கே.. கூடவே இன்னொரு செருப்பும் இருந்திருந்தால் க(வ)னத்தில் இருந்திருக்கும்.

அனாமிகா

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்