டைம் இல்லா படத்துக்கு வந்த சோதனை பாரீர்!

சதீஷ் கர்ணா என்ற அறிமுக இயக்குநர் இயக்கிய டைம் இல்ல என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்த மனு பார்த்திபன், தன்னால் உருவாக்கப் பட்ட படத்தில் என் ஒட்டு மொத்த உழைப்பை திருடி என்னை அழிக்க பார்க்கிறார் என குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர்.

சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகிய காமெடிப் படம் டைம் இல்ல. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது. இப்படத்தை மனு பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் மனு பார்த்தீபன் படத்தை மொத்தமாக அபகரிக்கப் பார்ப்பதாக அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா குற்றம் சாட்டியுள்ளார். சதீஷ் கர்ணா படத்தை நிறைவு செய்து, சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளார். தற்போது, திடீரென சதீஷ் கர்ணாவை காரணம் இல்லாமல் நீக்கி விட்டு, தயாரித்து நடித்த மனு பார்த்திபனே இப்படத்தை இயக்கியதாகவும் அறிவித்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் என்கிறார் இயக்குநர் சதீஷ் கர்ணா.

மேலும், சதீஷ் கர்ணா நடித்த 5 காட்சிகளையும் காரணம் கூறாமல் நீக்கி விட்டு, மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து அக் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் மனு பார்த்திபன். சமீபத்தில் வெளியான டீசரிலும், வெளிவரவிருக்கும் படத்திலும் அக்காட்சிகளை சேர்த்திருக்கிறார்களாம். படம் சென்சார் ஆன பின் மீண்டும் இக்காட்சிகளை சேர்த்து மறு சென்சார் போக திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளரும் நடிகருமான மனு பார்த்திபன்.

தமிழ் சீமாவில் கதைத் திருட்டு புதிதில்லை என்றாலும் இவ் விவகாரம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இவ்விவகாரம் குறித்து இயக்குநர் சதீஷ் தயாரிப்பாளரிடம் நியாயம் கேட்ட போது அதற்கு பதிலளித்த மனு பார்த்திபன், “இயக்குநர் பாலா ரீமேக் செய்த படத்திலிருந்து பாலாவையே தூக்கி போட்டுவிடவில்லையா?” என்று கேட்டுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவருக்கு ஒரு உண்மை புரியவில்லை. பாலாவை நீக்கிய கம்பெனி அவர் இயக்கிய ஒரு காட்சியைக் கூட பயன்படுத்த வில்லை. புதிதாகத்தான் படம் எடுத்தார்கள். ஆனால் என் கதையை, நான் எடுத்த படத்தை அப்படியே அபகரித்துள்ளார்கள்” என முறையிட்டுள்ளார்.