ஆடை படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

தமிழில் சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதன் பின்னர் அவர் நடித்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார் இவர். அதன் பின்னர் தமிழில் முன்னணி நாயகியாக உருவெடுத்துவிட்டார். விஜய், விக்ரம் என முன்னணி நாயகர் களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். இவர் தமிழில் கடைசியா நடித்த திரைப்படம் ராட்சசன் மாபெரும் வெற்றியை பெற்றது.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஆடை. இந்த படத்தினை ரத்னகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனிடையே இந்த ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதன் சாராம்சம் இதோ-

இயக்குநர் மித்ரன்

நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று எனக்குத் தெரியும். இப்படம் வெளியானதும் அனைவருக்கும் தெரியும் என்றார்.

இயக்குநர் ரவிக்குமார்

நான் ஐந்து சந்திப்புக்களிலேயே இயக்குநருடனான சந்திப்பு நெருக்கமாக வந்துவிட்டது. ‘ஆடை’ சுதந்திரம் பெண்களுடைய ஆடையினால் தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள் தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்றார்.

இயக்குநர் லோகேஷ்

ரத்னம் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஆடை கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும் என்றார். அதற்காக அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது என்றார்.

இயக்குநர் ஸ்ரீகணேஷ்

மேயாத மான் படத்தின் கதைக்கும், ஆடை படத்தின் கதைக்கும் முற்றிலும் வேறுபாடான கதை. இப்படத்தின் பெயரும், முதல் பார்வை போஸ்டரும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே படமும் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் நிதிலன் –

‘மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் படம் முடித்துவிட்டு அடுத்த படத்தின் அதன் சாயல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஒரு இயக்குநருக்கு இருக்கும். அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும் என்றார்.

இசையமைப்பாளர் பிரதீப்

என்னையும் என்னுடைய ‘பாண்ட்’ ஊறுகாயையும் இதில் முன்னிலைப்படுத்தியதற்கு ரத்ன குமாருக்கு நன்றி. இப்படத்தில் இசை சார்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் –

14 வருட கால நண்பர் ரத்னம். அவர் வலிமையான எழுத்தாளர் என்பது இப்படம் பார்த்தால் அனைவருக்கும் அது தெரியும் என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் கவிதா.ஜே.

டீஸர் பார்த்து பலரும் கேட்டார்கள் ஆடை பத்திற்கு எதற்காக ஆடை வடிவமைப்பாளர் என்று. ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று இல்லாதபோது தான் தெரியும். அதை இயக்குநர் மிக அழகாக கூறியிருக்கிறார் என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா

என்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர் தான் காரணம். சில கறைகளைத் துடைப்பதற்கு கிழிந்த ஆடையை எடுப்போம். அதுபோல் சமுதாயத்தில் இருக்கும் கறையைத் துடைப்பதற்கு இந்த ‘ஆடை’யை எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை ரம்யா –

இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்து நன்றாக நடிப்பு வரும் என்று சிறந்த கதாபாத்திரம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளினியான என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி. ‘மைனா’ படத்திலிருந்தே அமலாபாலுடன் எனக்கு நெருக்கமாக நட்பு இருந்தது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம் மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இப்படத்தில் எனக்கு ‘ஜெனி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இம்மாதிரியான படத்தில் நடித்திருப்பதில் எனக்கு பெருமை. இந்தியாவிலேயே அமலா பால் மாதிரி தெரியமாக யாராவது இருப்பார்களா என்ற தெரியாது. மகளிரை கொண்டாடும் மாதமிது என்றார்.

அருண்பாண்டியன்:-

பாதி படம் எடுத்து முடித்திருக்கும் நிலையில் என்னிடம் வந்தார்கள். இக்கதையையும், அமலா பாலின் கதாபாத்திரத்தைக் கேள்விபட்ட பிறகு இப்படம் இயல்பான படம் இல்லை என்று இப்படத்தை வெளியிட முடிவு செய்தேன். இப்படம் இந்தியா முழுவதும் பேசப்படும். தணிக்கைச் சான்றிதழுக்கு செல்லும் முன்பு நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். தணிக்கைக் குழுவே இப்படத்தை பாராட்டியிருக்கிறது என்றார்.

இயக்குநர் ரத்னகுமார்:-

இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது. ‘மேயாத மான்‘ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரதீப் இசையைத் தொகுப்பதில் வல்லவர் என்று கூறினார். பொதுவாக இரண்டாவது படம் தான் இயக்குநருக்கு சவாலாக இருக்கும் என்று கூறுவார்கள். பார்த்திபன் எப்போதும் எல்லோரும் போகும் பாதையில் பயணிக்கமாட்டார். அவர் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் சுப்பு –

இக்கதையைப் படித்ததும் அமலா பால் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று அவரின் மேலாளர் பிரதீப்பிடம் கூறினோம். 23 நாட்கள் சில சவாலான காட்சிகளில் நடிப்பதற்கு முதல் நாள் தயங்கினார். ஆனால், அடுத்த நாளிலிருந்து ஒரு கேள்வியும் கேட்காமல் நடித்து முடித்தார்.அதேபோல் ஒரு படத்திற்கு வெற்றி என்பது அப்படத்தில் பணியாற்றும் குழுக்களின் ஒற்றுமை தான். அது இப்படத்தில் அமைந்திருக்கிறது என்றார்.

பார்த்திபன் –

ஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப்படத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் என்றார்.

நடிகை அமலா பால்-

இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதா நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியரியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணா கவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன் பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம். ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.

பல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர். ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான். ‘ஊறுகாய்‘ குழுவினரின் பணி சிறப்பாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள்” என்றார்.

இறுதியாக, ‘ஆடை’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *