என் கதாநாயகன் வளர்ச்சியை கமல் கெடுத்துட்டார்! – விவேக் ஓப்பன் டாக்!

காமெடி நடிகர் விவேக், சார்லி ஆகியோருடன்  பூஜா தேவரியா  ஹாலிவுட் நடிகையான Paige Henderson- போன்றோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய கணிணி அறிவியல் பொறியாளர்கள் பலர் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இத் திரைப்படத்தை ‘டெண்ட் கொட்டா’ என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் திகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் 19ம் இப்படம் ரிலீஸாவதையடுத்து  வெள்ளைப்பூக்கள் பட டீம் பத்திரிகையாளளை சந்தித்து அளவளாவியது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் விவேக், சார்லி, தேவ், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் விவேக் இளங்கோவன் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சார்லி பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிக முக்கியக் காரணம் என் நண்பன் விவேக்தான். விவேக் எனக்கு தொடர்ச்சியாக பல உதவிகளைச் செய்து வருகிறார். பல மேடைகளில் என்னைப் பாராட்டி புகழ்ந்து பேசி வருகிறார். ஒரு முறை என்றால் பரவா யில்லை.. தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தால் எப்படி..? இதனால், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபராக விவேக் இருந்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக அமெரிக்காவில் சியாட்டில் நகரில் தொடர்ந்து ஒரு மாத காலம் இருந்து ஷூட்டிங்கில் கலந்து கொண்டோம். இது ஒரு துப்பறியும் கதை என்பதால் சஸ்பென்ஸ், திரில்லரை கடைசிவரையிலும் கொண்டு போகும் அளவுக்கு மிக சிறப்பாக இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் விவேக் இளங்கோவன். அவர் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இந்தப் படக் குழுவினர் அனைவரும் எங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். இதற்காக அவர்களுக்கு எனது நன்றிகள்…” என்றார்.

நடிகர் விவேக் பேசும்போது, “அமெரிக்காவில் வசிக்கும் சில தமிழர்கள் ஒன்றிணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் என்னை நடிக்க அழைத்தமைக்காக அவர்களுக்கு முதலில் எனது நன்றிகள். அமெரிக்காவில் வசிக்கும் எனது மகனைப் பார்க்க நான் அமெரிக்கா செல்கிறேன். அமெரிக்காவில் இருக்கும்போது அங்கேயிருக்கும் சார்லியைச் சந்திக்கிறேன். அப்போது சில சம்பவங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதுதான் படத்தின் கதை.ன் சார்லி சிறந்த குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல எனக்குக் கிடைத்த சிறந்த நண்பரும்கூட. அவருடைய பெருமைக்கு அளவில்லை. இப்போது இல்லை.. இன்னும் எத்தனை மேடைகள் கிடைத்தால்கூட அதில் சார்லியை நான் பாராட்டித்தான் பேசுவேன்.

ஏ.ஆர்.ரகுமானிடம் இந்தப் படத்தைப் பற்றி நான்தான் சொன்னேன். ‘இந்தப் படத்துக்கு இசை யமைத்துத் தர வேண்டும்’ என்று ரஹ்மானிடம் கேட்டுக் கொண்டேன். முதலில் ரகுமான் இதற்கு ஒத்துக் கொண்டார். ‘மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு வாருங்கள். இசையமைத்துத் தருகிறேன்’ என்றார்.ஆனால் எங்களுடைய தாமதத்தினால் அவரை அதற்குப் பிறகு நாங்கள் நெருங்க முடியவில்லை. நாங்கள் பிரீயாக இருக்கும்போது அவர் ப்ரீயாக இல்லை. அவரே ஒரு நாள் எங்களை அழைத்து, ‘இப்போது வேண்டாம் விவேக். என்னுடைய பல வேலைகள் கெடும் போலிருக்கிறது. அடுத்தப் படத்தில் பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் நான் நாயகனாக நடித்த ‘நான்தான் பாலா’. ஒரு காமெடியன் ஹீரோவாக நடிக்கிறானே என்று எல்லோரும் பொறாமைக் கண்ணோடு பார்த்த காலம் அது. ஆனால் அந்தப் படம் வெளிவந்த நேரத்தில் கமல் ஸாரின் ‘பாபநாசம்’ வந்தது. ‘பாபநாசம்’ படத்துக்கே அனைத்து தியேட்டர்களையும் புக் செய்துவிட்டதால் என் படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் போய்விட்டது. உடனே ‘விவேக்கை நாசம் செய்த கமல்’ என்று டைட்டில் போட்டு நியூஸ் போட்டுராதீங்க. இந்தப் படத்திற்கு அது போன்ற சூழல் ஏற்படாது என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தின் டைட்டிலான ‘வெள்ளைப்பூக்கள்’ என்கிற எழுத்துக்களில் ‘பூ’ என்னும் எழுத்து மட்டுமே சிகப்பு கலரில் உள்ளது. இதற்கும் ஒரு காரணம் உண்டு. சிகப்பு ரத்தத்தைத் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். அது பழி வாங்கும் உணர்வை, சமூகக் கடமையை உணர்த்தலாம். பாதிக்கப் பட்ட தாய், தந்தையரின் கொதிப்பைக் குறிக்கலாம். அத்துடன் குற்றம் செய்தவர்கள் இன்றைக்கும் தண்டனையை அனுபவிக்காமல் இருக்கிறார்களே என்கிற கோபத்தையும் குறிக்கலாம். இப்படியும் ஒரு ஆள் வரணும். இப்படித்தான் தண்டனைகளை கொடுக்கணும் என்பதையும் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். அது என்ன குற்றம்.. என்ன தண்டனை.. யார் அவர்கள் என்பதையெல்லாம் தியேட்டரில் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்..” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *