நெடுநல் வாடை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் கதைக்கு மட்டுமின்றி தலைப்புக்கும் பஞ்சம் வந்து ரொம்ப நாளாகிறது. அதனால் தான் முன்னொருக் காலத்தில் ஹிட் அடித்த படங்களின் பெயரை மறுபடியும் உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புது முயற்சியாக தூய தமிழில் அதுவும் பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை என்னும் தலைபில் ஒரு படம் வந்துள்ளது. அதுவும் நெல்லையின் மண் மனம், மணம், குணம், நிறம், காரம், இனிப்பு, புளிப்பு என்ற பல்வேறு சுவைகளை கொஞ்சம் கூட மா(ற்)றாமல் ஒரு சினிமாவாகக் கொடுத்துள்ளார்கள். படத்துக்குள் நுழைவதற்கு முன் சில தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. இந்த நெடுநல் வாடை-யைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் ஆவார். இப்பாடலானது பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுவதாக உள்ளது. அதில் கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்ற தலைவனை எதிர்பார்த்து அவன் வராததால் தனிமைத் துயரில் தவிக்கும் தலைவி யின் காதலை அழகுபட எடுத்துரைக்கிறார். அவளுக்கு வாடைக்காலம் நெடியதாகத் தெரிந்ததாம். தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்று பெயரானது. அதே சூழ்நிலையை இன்றைய ஒரு ஜோடியை வைத்து விவரித்து மனதில் நிற்கிறார்கள்.

அதாவது திருநெல்வேலி ஏரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் செல்லையா (பூ ராமு). இவரது மகள் பேச்சியம்மாள் (செந்தி) ஊர் விடலை ஒருவனுடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிப் போனவள், பின்னாளில் அதே கணவனால கைவிடப்பட்டு தனது இருகுழந்தைகளுடன் மீண்டும் அப்பாவிடம் அடைக்கலம் ஆகிறாள். அதிலும் அடாவடி மகனின் எதிர்ப்பையும் மீறித்தான் மகளுக்கும், பேரன், பேத்திக்கும் அடைக்கலம் தருகிறார். ஆனாலும் எந்நேரமும் வெறுப்பை உமிழும் தன் மகன் கொம்பையாவை (மைம் கோபி) ஜெயிக்க , நன்றாக படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை, பாசத்தோடு ஊட்டி பேரன் இளங்கோ வைப் பொறுப்பாக வளர்க்கிறார் தாத்தா. ஆனால் இளங்கோவனுக்கு படிக்கும் போதே தன்னைச் சின்ன வயசில் இருந்து காதலிக்கும் அமுதா (அஞ்சலி நாயர்) மீது ஈர்ப்பு வருகிறது. இந்த விஷய்ம் தெரிந்து பேரனை வெளிநாடு அனுப்ப தாத்தா ஏற்பாடு செய்கிறார். அதே நேரம் காதலியுடன் ஊரை விட்டு ஓடிப் போக ஆயத்தமாகிறான் இளங்கோவன். அதை அடுத்து தாத்தா ஆசைப்படி நடந்ததா? அவன் காதல் என்னானது? என்பதை கமகமக்க சொல்லி இருக்கிறார் இயக்குநர் செல்வக் கண்ணன்.

நம் தமிழ் சினிமாவில் குடும்ப உறவுகள், பாசம், காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படங்கள் எக்கச்சமுண்டு. ஆனால் இந்த நெடுநல்வாடை இவற்றில் இருந்து தனித்துவமாக நிற்கிறது. காரணம் பெண்ணுக்குச் சொத்துரிமை என்ற கருவை எடுத்துக் கொண்டு அதில் காதலை இணைத்து கூடவே தாத்தா பேரன் என்னும் உறவை கண்டோர் உணரும் வண்ணம் திரைக்கதை அமைத்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக நெல்லை வட்டார பாஷை என்றால் என்னலே,, வாலே, போலே என்ற சராசரி சொலவடைக்களைத் தாண்டி நெல்லை அம்மாமார்கள் அன்றாடம் பேசும் மொழியை இலாகவமாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் சிலபல இடங்களில் வயசுக்கு வந்த பெண் பேசும் சொற்கள் முகத்தைச் சுளிக்க வைக்கிறது.

தாத்தாவாக வரும்” பூ ராமு” நடிக்கிறாரா அல்லது வாழ்கிறாரா என்று குழம்பும் வண்ணம் அசத்தி இருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு இப்படத்தின் மூலம் சில பல விருதுகள் கிடைக்கும். நாயகன் இளங்கோ பொருத்தமான தேர்வு.. நடிப்பு பயிற்சி கம்மியானவர் என்றாலும் இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதை வழங்கி இருக்கிறார். நாயகி அஞ்சலி நாயர் தனிக் கவனம் பெறுகிறார். துருதுரு வென பார்த்து, நடந்து வெடுக்க்கெடுக் என்று பேசி சகலரையும் கவர்ந்து விடுகிறார். ஏனையோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ரோலை கச்சித்தமாகச் செய்திருக்கிறார்கள்.

இசை ஜோஸ் பிராங்கிளின் கிராமத்து இசையை கொடுத்து கிறங்க வைத்திருக்கிறார். ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி நெல்லை வயல் பரப்புகளையும், கிராமத்தையும், அணைக்கட்டையும் இயற்கை ஒளியில் அழகாகக் காட்டி அசத்தி இருக்கிறார். சங்கர் நகர் பாலிடெக்னிக்-கில் உடன் படித்த தன் நண்பன் ஜெயிக்க வேண்டும் என முடிவு செய்து, படத்தை தயாரிக்க செல்வ கண்ணனுக்கு 50 சக மாணவர்கள் தயாரிப்பாளர்களாகி உதவியுள்ளனர். அந்த உதவிக்கு கோலிவுட்டுக்கு ஒரு தரமான சினிமாவை கொடுத்து சபாஷ் பெறுகிறார் செல்வ கண்ணன்

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *