ஜூலைகாற்றில் விமர்சனம்!

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஓர் அர்த்தம் உள்ளது. அதன் விளைவால் இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கி இருக்கிறார். “நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்” என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான். “நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.” “உங்களைப் போல நாங்களும் ஊர் ஊராகத் தேடுகின்றோம் , கிடைத்தால் சொல்லி அனுப்புங்கள்” என்று வெவ்வேறு விதமாக ஒரே பதில் தான் கிடைத்ததே தவிர ஆனந்தம் கிடைக்கவில்லை.

சோர்ந்து போன அந்தப் பணக்காரன் ஒரு கட்டதில் உயிரை மாய்த்து விடலாம் என்னும் அளவிற்கு வந்துவிட்டான். அப்போது ஒரு மரத்தடியில் சாது ஒருவர் அமர்ந்திருந்தார். இவர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை நெருங்கினான். சாதுவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. கையிலிருந்த வைர மூட்டை நிரம்பிய ஒரு பையை அவர் காலடியில் வைத்து, “ஐயா ஊர் ஊராக நான் சுற்றி வருகிறேன் ஆனால் எனக்கு ஆனந்தம் மட்டும் கிடைக்கவில்லை” என்றான்.

சாது அவனைப் பார்த்து, “உண்மையாகச் சொல்கின்றாயா? இதுவரை உனக்கு ஆனந்தம் கிடைத்ததே இல்லையா?”, அதற்கு அவன் சோகமாக”ஆமாம் சுவாமி உண்மையாகக் கிடைக்கவில்லை”, நிஜமாகத்தான் சொல்கின்றாயா ஒரு முறையும் நீ ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையா? என்று பலமுறைக் கேட்ட பின்பு அவனுக்கு கோவம் வந்துவிட்டது, எத்தனைத் தடவை கேட்டாலும் இல்லை.. இல்லை தான் என்றான்.

அவன் பேசி முடிக்கும் முன்பு சாது, வைரங்கள் நிறைந்த அந்தப் பையை தூக்கிக் கொண்டு ஓடினான். “ஐயோ என் வைரம்.. என் வைரம்.. யாராவது பிடியுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று அந்தச் சாதுவை துரத்திக்கொண்டே சென்றான்.

“கொள்ளைக் கொள்ளை! நீயும் ஒரு மனிதனா? நீயும் ஒரு சாதுவா என்று புலம்பிக்கொண்டே துரத்தினான். சாதுவிற்கு அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துச் சந்து பொந்துகளும் அத்துப்பட்டி. அதனால் வேகமாக ஓடிச்சென்றான். கிராமமக்களும் தனவானின் கதறலைக் கேட்டு சாதுவைத் துரத்தினர். ஒரு கட்டத்தில் அவர்கள் முடியாமல் ஓய்ந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டனர். பின் அவர்களிடம் சற்றும் எதிர்பாராத விதமாக, சாது அந்த வைர மூட்டையுடன் வந்து அமர்ந்தான். தனவான் பையை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, வானை நோக்கி கையை உயர்த்தி, “நன்றி இறைவா ! நன்றி” என்று ஆனந்தமாகக் கூறினான். அந்த இன்பத்தில் அருகில் இருக்கும் சாதுவையும் மறந்துவிட்டான்.

சாது கேட்டார், உனக்குச் சிறிதளவாவது ஆனந்தம் கிடைத்ததா? என்று..

சிறிதளவா? இதுபோன்ற ஆனந்தத்தை நான் அனுபவித்தே இல்லை.. இதுவே முதல் முறை என்றான். சாது விளக்கினார் : ‘ஆனந்தத்திற்கு முன்பு துக்கப்பட வேண்டியது அவசியம். அடைவதற்கு முன் இழக்க வேண்டியது அவசியம். முக்திக்கு முன் பந்தத்தின் அனுபவம் தேவை. ஞானத்திற்கு முன் அஞ்ஞானம் இருக்க வேண்டியது அவசியம்.’ என்றார்..”

வெற்றியை அனுபவிக்கத் தோல்வியை ருசிக்க வேண்டியது அவசியம். அது போல்தான் காதல். காதலை உணர காதலை துறக்க வேண்டும். அதைத்தான் இந்த ‘ஜூலைக் காற்றில்’ படம் மிக அழகாக சித்தரிக்கிறது.

அதாவது மனித மனதில் இயல்பாக எழும் காதலில்தான் பல வகைகள் உண்டே… `ஒருதலைக் காதல்’, `இரு மனமொத்த காதல்’, `புனிதமான காதல்’, `தெய்வீகக் காதல்’..  எனறு நீளும் லிஸ்டில் காதலுக்குப் பின் காதல் என்றொரு ரகமுண்டு என்று கொஞ்சம் நவீனமயமாகச் சொல்லி இருக்கிறார்கள்.
கதை என்னவென்றால் ஒரு ஐ டி நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் நாயகன் அனந்த்நாக். வாலிப வயசில் தனக்கொரு கேர்ள் ஃபிரண்ட் கிடைப்பாளா? என்ற ஏக்கத்துடன் அலையும் பையன் ஒரு நிகழ்ச்சியின் போது அஞ்சு குரியனை சந்திக்கிறார். கண்டதும் நட்பு அப்புறம் வழக்கம் போல் காதலிக்கிறார்கள். அந்த காதல் நிச்சயதார்த்தம் வரை செல்கிறது. அதே சமயம் தன் வேலை காரணமாக அஞ்சு குரியன் பெங்களூர் சென்று விடுகிறார்.

அந்த கேப்-பில் இன்னொரு நாயகியான சம்யுக்தா மேனனை சந்திக்கிறார். அடடே இவள்தான்.. எதிர்பார்த்த கனவு தேவதை இதோ என்றெல்லாம் பினாத்த ஆரம்பித்து விடுகிறார். கூடவே முழுமையான காதல் இல்லாத அஞ்சு குரியனை திருமணம் செய்துக்கொண்டு பொய்யாக வாழ்வதைவிட தனக்கு பிடித்த சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் அனந்த் நாக்.

இதை அடுத்து பெங்களூரில் இருந்து திரும்பும் அஞ்சு குரியனிடம் நமக்குள் ஒட்டாது.. பிரிந்து விடலாம் என்றும் அதற்கான காரணத்தை டீசண்டாகச் சொல்லி பிரிந்தும் விடுகின்றனர். அப்புறம் சம்யுக்தாவும், அனந்த்நாக்கும் காதலிக்கிறார்கள். ஆனால் அந்த சம்யுக்தா தனிமனித சுதந்திரத்தை விரும்பும் பெண்ணாக இருக்கிறார் அதனால் தனக்கான சுதந்திரம் ஒரு போதும் தன்னுடைய காதலனால் உடையக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அனந்த்நாத் அதை ஏற்க மறுக்கிறார் இதனால் சம்யுக்தா இந்த காதல் சரிபட்டு வராது என்று கூறி அனந்த்நாக்கை விட்டு பிரிகிறார்.

இந்தக் காதல் பிரிவில் இருந்து விடுபட கோவா வரை பயணம் மேற்கொள்கிறார் அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறார். ஆனால் அந்த பெண் வேறொருவரை லவ் செய்வதால் அனந்த நாக்-கை புறக்கணிக்கிறார்.இதன் பிறகு மறுபடியும் சம்யுகதாவை தேடிப் பிடித்து நூல் பிடித்து நேரடியாக சந்திக்கும் போது அவர் வேறொரு ரூட்டில் போகிறார். அப்புறம் என்னாச்சு என்பதுதான் இக்காற்றின் கதை.

சில பல கேரக்டர் ஆர்டிஸ்டாக வந்து போன அனந்த் நாக் இப்படத்தில் நாயகன். ஆரம்பத்தில் அவ்வளவாக ஒட்டாத இவர் முகமும் நடிப்பும் பின்னர் பச்செக்கென்று பிடித்து விடுகிறது. அடுத்தடுத்து காதல், பிரிவு, விரக்தி என ஸ்கோர் செய்கிறார். அஞ்சு குரியன் கேரக்டர் அழகு. சம்யுக்தா கொத்தும் கொலையுமாக வந்து வாழ்ந்து விட்டு போயிருக்கிறார். கேரளா , கோவா, இலங்கை இயற்கை வளங்களை நம் கண் முன்னே பரப்புகிறது டிமல் சேவியர் எட்வர்டின் கேமரா. இசை- இன்றைய இளைஞர்களின் லப் டப் அறிந்த ஜோஸ்வா ஸ்ரீதர் ரொம்ப கச்சிதமாக தன் பங்களிப்பை அளித்திருக்கிறார்.

வழக்கமான காதல் கதையை வழக்கத்துக்கு மாறாக ஆறு பாகங்கங்களாகப் பிரித்து அவரவர் பார்வையில் கதையை சொல்லும் பாணி தமிழுக்கு புதுசு. அதை மிக நாசுக்காக செய்து அசத்தி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் மொபைல் வாழ்க்கை வாழும் இக்கால இளசுகளின் மனசையும், போக்கையும் அப்பட்டமாகக் காட்டும் இப்படத்தை காதலில் விழ ஆசைப்படும் அல்லது லவ்வில் வீழ்ந்த விட்ட இளைஞர், இளைஞிகள் ஜோடியாக கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்