தில்லுக்கு துட்டு 2 ரிவியூ!

சினிமா எடுப்பதே கஷ்டம் என்பதும் அதை ரிலீஸ் செய்வது அதை விட கஷ்டம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சினிமாவை சிரிப்பு படமாக எடுப்பது மிகக் கஷ்டம் அதை விட பேய் படம் எடுப்பது கஷ்டமோ கஷ்டம் என்பார்கள். இதற்குக் காரணம் எவ்வளவோ உண்டு.. அதையெல் லாம் இப்போது அலச வேண்டாம். ஆனால் கொஞ்ச காலமாக திரைக்கே வராமல் இருந்த சந்தானம் ஒரு பேய் படத்தை அதையும் சிரிப்புப் படமாக எடுத்து இரட்டை மாங்காய் விழ வைத்து ரசிக்கவும் வைத்திருக்கிறார் என்பதுதான் ஹைலைட். இந்த படத்தில் வழக்கம் போல் லாஜிக் ஐல்லை, அது சரி இல்லை இது தப்பு என்றெல்லாம் சொல்லும் விமர்சனங் களை ஓரங்கட்டி வைத்து விட்டு தியேட்டருக்கு போய் தில்லுக்கு துட்டு 2’ படத்தை பார்த்தால் குடுத்த காசு ஜீரணமாகி விடும் என்பது மட்டும் நிஜம்.

2016ம் வருஷம் வெளியான ‘தில்லுக்கு துட்டு ‘ படம் ரசிகர்களுக்கு நல்ல சிரிப்பானுவத்தை கொடுத்தது. அதை தொடர்ந்தே அதன் இரண்டாவது பாகம் தயாராகி ரிலீஸாகி உள்ளது. அதே சமயம் இதுவும் அதே கதையின் தொடர்ச்சி என்று நினைத்தால் தப்பு. இப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்வதானால் அலப்பறை செய்து குடியிருக்கும் ஏரியாவாசிகளின் சாபத்துக்கு ஆளான ஆட்டோ டிரைவர் சந்தானத்தை காதலில் விழ வைப்பதால் ஏற்படும் விளைவே படம்.. ஆனால் இதில் பேய் இருக்கு.. ஆனா இல்லை.. அது நிஜப் பேய்.. இல்லை டம்மி பிசாசு.. என்றெல்லாம் ஆராயாமல் இது சந்தானம் சினிமா என்பதை நினைவில் கொண்டு படத்தைப் பார்த்தால் ஆரம்ப பேராவில் சொன்னது போல் சிரி., சிரி என்று சிரித்து விட்டு வரலாம்.

குறிப்பாக சந்தானத்தின் கவுன்டர் காமெடிக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் படத்தில் வரும் சில பல ஓட்டைகள் அடைக்கப்பட்டு விடுகின்றன. அதிலும் கடந்த இரண்டு படங்களில் கொடுத்ய்தது போல் ஓவர் பில்ட் அப் ஓப்பனிங் காட்சிகள் இல்லாததே படத்தின் பெரும் பலமாகி விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மொட்டை ராஜேந்திரன் அதகளம் செய்திருக்கிறார். படத்தின் செகண்ட் ஹீரோ ராஜேந்திரன் என்றே சொல்லலாம். நாயகி சொன்னதை செய்து விட்டு போகிறார். ஊர்வசி கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

ஆரம்பக் காட்சியிலேயே தன் வித்தையைக் காட்ட தொடங்கி எண்ட் கார்ட் வரை தனி ஆவர்தனம் செய்து படத்துக்குப் பலம் சேர்த்து விட்டார் கேமராமேன் தீபக்குமார்…இசையை கதைக்கு தேவை யான அளவு கொடுத்த மியூசிக் டைரக்டர் போட்ட பாடல் எதுவும் மனசில் ஒட்ட வில்லை.

பேய் கதையில் டுபாக்கூர் மந்திரவாதிகளையும் அம்பலப்படுத்தி கூடவே நிஜ நம்பூதிரியையும் பேச வைத்து மேலும் அது, இது, எதை எதையோ மிக்ஸ் பண்ணி சூடாக படையல் படைத்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா.. சூடான உணவில் சில குறைபாடுகள் இருந்தாலும் சுவைக்கும் போது அதெல்லாம் தெரியாது.. அது போல் இந்த தில்லுக்கு துட்டு 2 பிம்பிளிக்கா பிளாப்பி ரகம்!