“1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்தின் மூலமாக பாலிவுட்டில் எண்ட்ரி ஆகும் ஜீவா!

1983-ம் வருடம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வருடம். அந்த வருடம்தான் லண்டனில் நடந்த புருடன்ஷியல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியது. இந்தியா கைப்பற்றிய முதல் உலகக் கோப்பையும் அதுதான். அந்தத் தருணத்தைப் பதிவு செய்யும்விதமாக பாலிவுட்டில் ‘1983 World Cup’ என்கிற பெயரில் புதிய திரைப்படத்தை உருவாக்குகிறார்கள். இதில் பாலிவுட் நடிகர் ‘ரன்வீர்சிங்’ கபில்தேவாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் அப்போதைய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராக திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ண மாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நமது தமிழ் நடிகர் ஜீவா நடிக்கவிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் மூலமாக ஹிந்தி திரையுலகத்தில் முதன்முதலாக கால் பதிக்கிறார் நடிகர் ஜீவா. 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் அவருக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சந்தோஷ செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் ஜீவா.

இது பற்றி நடிகர் ஜீவா பேசும்போது, “நான் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் உள்ளவன். பள்ளி, கல்லூரி காலங்களில் பல கிரிக்கெட்  போட்டிகளில் விளையாடி ஜெயித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு கிடைத்த முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்பந்தமான படம் என்று நினைக்கும்போதே சந்தோஷமா இருக்கு. படத்தின் ஷூட்டிங்கிற்காக எப்போது காமிரா முன்பாக நிற்போம்ன்னு துடித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த ‘1983 வேர்ல்ட் கப்’ மல்டி ஸ்டார்ஸ் மூவி. ‘பாகுபலி’ எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத் தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ. அது மாதிரி இந்த படமும் இருக்கும். படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கும் மேல் இருக்கும். 1983-ம் வருடத்தில் இந்தியா உலகக் கோப்பை போட்டியை ஜெயித்து பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள்தான் படத்தின் கதைக் களம். அப்போது நமது இந்திய அணியில் இருந்த தமிழகத்தின் வீரர்  கிருஷ்ணமாச்சாரி  ஸ்ரீகாந்த்  கதாபாத்திரத்தில்தான் நான் நடிக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை.

2019 மே மாதம் படத்தின் ஷுட்டிங் லண்டனில் துவங்குகிறது. கிட்டத்தட்ட  100 நாட்கள் ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. அதற்காக இப்போதே நான் தயாராகி வருகிறேன்.  மிகப் பிரபலமான பெளலரான சந்து என் வீட்டுக்கே வந்து எனக்கு பயிற்சி கொடுத்துட்டிருக்கார்.

‘லகான்’, ‘M.S.டோனி’ ஆகிய படங்களின் வரிசையில் இந்த ‘1983 வேர்ல்ட் கப்’ படத்துக்கும் இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இனிமேல் எனது திரையுலக வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் யானையைப் போல் பதியற மாதிரி இருக்கும். 2019 எனக்கு மட்டுமில்ல. இந்திய சினிமாவுக்கே பெருமையளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்..” என்றார் முகம் கொள்ளாத சந்தோஷத்துடன்..!