கஜா புயல் நிவாரண பணி : லைகா நிறுவனம் ரூபாய் 1.01 கோடி நிதியுதவி!

அண்மையில் தமிழக டெல்டா பகுதிகளை காவு வாங்கிய கஜா புயலால், தமிழகத்தில் 10,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக, தமிழக அரசு முதற்கட்டமாக கணக்கிட்டிருப்பதாக  தெரிவித்து உள்ள நிலையில் இப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

சோழ நாடு சோறுடைத்து என்று பல நூறு பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் புகழ் பாடி வரும் வற்றா வளம் கொண்ட தஞ்சை நிலத்தில் வாழ்ந்தோர் தற்போது சோற்றுக்கு வழியில்லாமல்  அவதிப்பட்டு வருகின்றார்கள். எப்படியோ கரையை  கடந்து  டெல்டா  மாவட்டங்களை மண்ணுக்குள்  அமுக்கி  சென்ற  கஜா  புயலினால்,  மக்கள்  அடிப்படை  வசதிகள்  எதுவும் இல்லாமல் க டும்  அவதிக் குள்ளாகி  இருக்கின்றனர். இப்புயலினால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில், சுமார் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. மேலும் மின்கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால், மின்மாற்றி மற்றும் கம்பங் களை மாற்றியமைக்க 12,532 மின்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதைதொடர்ந்து, கஜா புயல் பாதிப்பால் நிவாரண நிதி கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 22- ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,  அரசு  தரப்பு,  தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,  தமிழகத்தின்  பல்வேறு  பகுதிகளில்  இருந்து  நிவாரண பொருட்களும்  சென்ற வண்ணம் இருக்கின்றன.

lyca

சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ரூ.1.01 கோடியே ஒரு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.